சமூக விரோத செயல்களை தடுக்க குடிநீர் தொட்டியை சுற்றி சுவர் கட்ட ரூ.4 லட்சம் ஒதுக்கீடு

Thursday, 23 January 2014 00:00 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ௨ள்ளாட்சி நிதி
Print

தினகரன்             23.01.2014 

சமூக விரோத செயல்களை தடுக்க குடிநீர் தொட்டியை சுற்றி சுவர் கட்ட ரூ.4 லட்சம் ஒதுக்கீடு

திண்டுக்கல், : சமூகவிரோத செயல்களை தடுக்க மேல்நிலை குடிநீர் தொட்டியை சுற்றி சுற்றுச்சுவர் கட்ட ரூ.4 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் நகராட்சிக்குட்பட்ட 18, 23, 30 ஆகிய வார்டுகளை சேர்ந்த பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நகராட்சி நிர்வாகம் பஸ் ஸ்டாண்ட் அருகில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டியுள்ளது. இதில் ஆத்தூர் காமராஜர் அணையில் இருந்து கொண்டு வரப்படும் குடிநீர் ஏற்றப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

குடிநீர் தொட்டியை சுற்றி சுற்றுச்சுவரும் பூங்காவும் அமைக்கப்பட்டிருந்தது. காலபோக்கில் பூங்கா முறையான பராமரிப்பு இல்லாமல் சுவர் சிதைந்து விட்டது. சுற்றுச்சுவரின் ஒரு பகுதியை மர்மநபர்கள் இடித்து விட்டனர். இதனை பயன்படுத்தி இரவு நேரங்களில் கும்பல் புகுந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தது.

இதனையடுத்து சமூகவிரோத செயல்களை தடுக்கவும், மேல்நிலை குடிநீர் தொட்டி பகுதிகளை சுத்தமாக வைத்து கொள்ளவும், நகராட்சி நிர்வாகம் முடிவு செய்து சுற்றுச்சுவர் கட்ட திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், சுற்றுச்சுவர் இல்லாததால் குடிநீர் தொட்டி பகுதியில் சமூக விரோத செயல் நடந்து வருவதாக நகராட்சிக்கு புகார் வந்தது. இதை தடுக்கும் வகையில் சுற்றுச்சுவர் கட்ட ரூ.4 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணி விரைவில் தொடங்கப்படும் என்றார்.