மின் செலவினத்தை குறைக்கும் திட்டம்; வரும் 1ல் மாநகராட்சியில் அமல்

Thursday, 30 October 2014 12:15 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ௨ள்ளாட்சி நிதி
Print

  தினமலர்          30.10.2014

மின் செலவினத்தை குறைக்கும் திட்டம்; வரும் 1ல் மாநகராட்சியில் அமல்

திருப்பூர் : தமிழகத்தில், முதன்முறையாக, தெருவிளக்கு மின்சாரம், பராமரிப்பு செலவினத்தை மிச்சப்படுத்தும் புதிய திட்டம், தனியார் நிறுவன பங்களிப்புடன் திருப்பூர் மாநகராட்சியில் அமல்படுத்தப் பட உள்ளது. இதன் மூலம் மூன்று கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில், அதிக மின் செலவு ஏற்படும் 40 வாட்ஸ் டியூப் லைட்கள் 15,448 உள்ளன. 250 வாட்ஸ் சோடியம் ஆவிவிளக்குகள் 666; 150 வாட்ஸ் சோடியம் ஆவிவிளக்குகள் 57; 250 வாட்ஸ் மெட்டல் அலாய் விளக்குகள் 1,794 மற்றும் மெர்குரி விளக்குகள் உட்பட 24,575 தெருவிளக்குகள் உள்ளன. மேலும், 280 இடங்களில் உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.மாநகராட்சி தெருவிளக்குகளுக்கு மின் கட்டணமாக மாதம் 35 லட்சம் ரூபாய் வீதம், 12 மாதங்களுக்கு 4.20 கோடி; தெருவிளக்கு பராமரிப்புக்கு 1.80 கோடி என ஆண்டுக்கு ஆறு கோடி ரூபாய் வரை செலவாகிறது. தெரு விளக்கு பராமரிப்பு பணி, மின்சாரம் சேமிப்பு, புதிய மின் விளக்குகள் அமைத்தல் ஆகியவற்றுக்கு, ஒருங்கிணைந்த நகர்ப்புறவளர்ச்சி திட்டத்தின் கீழ் 28.29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 40 வாட்ஸ் டியூப் லைட்களுக்கு பதிலாக 15 வாட்ஸ் எல்.இ.டி., பல்பு பொருத்தப்படும்; விடுபட்ட பகுதிகளில் புதிதாக 5,800 தெருவிளக்குகள் அமைக்கப்படுகின்றன.

எல்.இ.டி., பல்ப் பொருத்துவதன் மூலம், தெருவிளக்குகளுக்கு செலவாகும் மின்சாரத்தில், 35 சதவீதம் சேமிக்கப்படும்; பராமரிப்பு கட்டணத்தில் 15 சதவீதம் குறையும். இத்திட்டத்தை செயல்படுத்த, தனியார் நிறுவனத்துடன் 10 ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் ஜி.ஐ.எஸ்., தொழில் நுட்பம் மூலம் கண்காணிக்கப்படும். இதனால், எரியாத மின் விளக்குகள் கண்டறியப்பட்டு, 100 சதவீத தெருவிளக்குகள் எரிவது உறுதி செய்யப்படும்.தமிழகத்தில் முதன்முறையாக, திருப்பூர் மாநகராட்சியில் வரும் நவ., 1ல் இத்திட்டம் துவங்கப்பட உள்ளது. இதன் மூலம், தெருவிளக்கு மின் கட்டணம் மற்றும் பராமரிப்பு செலவினத்தில் 50 சதவீதம் வரை குறையும் என மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மாநகராட்சி கமிஷனர் அசோகனிடம் கேட்டபோது, ""மாநிலத்தில் உள்ள அனைத்து மாநகராட்சியிலும், மின் சேமிப்பு மற்றும் பராமரிப்பை மேம்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, தற்போதைய அடிப்படை மின்சார செலவினம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, மூன்றாம் நிலை தனி வல்லுனர் குழு ஆய்வு செய்து, அனைத்து பணிகளும் முடிந்துள்ளன; வரும் 1ம் தேதி முதல், திட்ட பணிகள் துவங்கும்,'' என்றார்.