சென்னை மாநகராட்சி சாலைகளில் சீரான வேகத்தடைகள் அமைக்க நடவடிக்கை மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

Thursday, 09 January 2014 07:35 administrator நாளிதழ்௧ள் - சாலை௧ள் மேம்பாடு
Print

தினத்தந்தி               09.01.2014

சென்னை மாநகராட்சி சாலைகளில் சீரான வேகத்தடைகள் அமைக்க நடவடிக்கை மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகளில் சீரான வேகத்தடைகள் அமைக்க மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள்–பொதுமக்கள் புகார்

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

சென்னை மாநகராட்சி உள்வட்ட சாலைகள் மற்றும் பஸ் வழிச்சாலைகளில் பல்வேறு வடிவங்களில் பல இடங்களில் வேகத்தடைகள் பொருத்தப்பட்டு சில இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பயணம் செய்பவர்களுக்கு அதிர்வு ஏற்படுத்தும் வகையில் உயரமாகவும் அமைக்கப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

சென்னை மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் குறிப்பிட்ட வடிவமைப்புகளின்படி ஒரே சீராக எல்லா இடங்களிலும் அமைக்கப்படவில்லை. இதற்கான ஒழுங்குமுறை விதிகளையும் வடிவமைப்புகளையும் மாதிரிகளாக உருவாக்கி அதன் அடிப்படையில் வேகத்தடைகள் அமைக்கப்படவில்லை. இதுதொடர்பாக மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, கமிஷனர் விக்ரம் கபூர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டம் நடந்தது.

சீரான வேகத்தடைகள்

கூட்டத்தில் 25 கி.மீ., 15 கி.மீ. மற்றும் 10 கி.மீ. வேகத்தில் வாகனங்கள் கடந்து செல்லும் வண்ணம் இந்திய சாலை குழுமத்தின் வழிகாட்டுதலின்படி மூன்று வகையான வேகத்தடை வடிவமைப்புகளை தயார் செய்து சாலை சந்திப்புகள், விபத்து வாய்ப்புள்ள பகுதிகள், பள்ளிக்கூடம் மற்றும் மருத்துவமனை பகுதிகள் என பிரித்து வேகத்தடைகள் அமைக்க முடிவுசெய்யப்பட்டு உள்ளது.

அதன்படி ஒரு மண்டலத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும் வேகத்தடை அமைக்கக்கூடிய இடங்களை மண்டல அலுவலர், செயற்பொறியாளர், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர், கவுன்சிலர், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதி ஆகியோர் அடங்கிய குழுவினர் தேர்வு செய்வார்கள்.

பஸ் வழித்தடசாலைகளில் வேகத்தடை அமைக்கும் இடத்தை செயற்பொறியாளர் (பஸ் வழித்தடசாலை துறை), கோட்ட பொறியாளர் (தொழில்நுட்ப தணிக்கை குழுமம்), பஸ் பணிமனை மேலாளர், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் அடங்கிய குழுவினர் தேர்வு செய்வார்கள்.

அவசியமற்ற வேகத்தடைகள் நீக்கப்படும்

இக்குழுவின் பரிந்துரையின்படி கண்காணிப்பு பொறியாளர் (பஸ் வழித்தடசாலை துறை) ஆணை வழங்குவார். வேகத்தடை பொருத்தப்படவேண்டிய வடிவமைப்பானது அச்சாலை போக்குவரத்து மற்றும் அங்கு கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ள விபத்துக்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு முடிவு செய்யப்படும். இதற்காக தொழில்நுட்ப குழுவின் அங்கீகாரத்துடன் 3 வேகத்தடை மாதிரிகள் தயார் செய்யப்பட்டு மண்டல அளவில் ஒப்பந்தங்கள் கோரப்பட்டு, இதற்கான பணிகள் விரைவில் முடிக்கப்படும்.

வேகத்தடைகளில் வண்ண கலவை அடிக்கப்பெற்று, ஒளிரும் விளக்குகளுடன், உரிய எச்சரிக்கை பலகைகளும் பொருத்தப்படும். அங்கீகாரம் பெறப்படாத அவசியமற்ற வேகத்தடைகள் உடனடியாக நீக்கப்படும். வேகத்தடைகள் அமைப்பது குறித்து மேற்கண்ட குழுக்கள் தான் முடிவு செய்யும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.