அவசியமில்லாதவை உடனடியாக அகற்றப்படும் புதிய வேகத்தடை அமைக்க குழு நியமனம் மாநகராட்சி அறிவிப்பு

Thursday, 09 January 2014 00:00 administrator நாளிதழ்௧ள் - சாலை௧ள் மேம்பாடு
Print

தினகரன்           09.01.2014

அவசியமில்லாதவை உடனடியாக அகற்றப்படும் புதிய வேகத்தடை அமைக்க குழு நியமனம் மாநகராட்சி அறிவிப்பு

சென்னை, : சென்னை மாநகராட்சி உள்வட்ட சாலைகள் மற்றும் பேருந்து தட சாலைகளில் பல்வேறு வடிவங்களில் பல இடங்களில் வேகத்தடைகள் பொருத்தப்பட்டுள்ள. இதில் சில இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பயணம் செய்பவர்களுக்கு அதிர்வு ஏற்படுத்தும் வகையில் உயரமாகவும் அமைக்கப்பட்டுள்ளன என ஏராளமான புகார்கள் வந்தன.

இதைதொடர்ந்து சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் சென்னை மாநகராட்சி உயர் அலுவலர்களுடன் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, 25 கி.மீ, 15 கி.மீ, 10 கி.மீ வேகத்தில் வாகனங்கள் கடந்து செல்லும் வகையில் இந்திய சாலை குழுமத்தின் வழிகாட்டுதலின்படி மூன்று வகையான வேகத்தடை வடிவமைப்புகளை தயார் செய்து சாலை சந்திப்புகள், விபத்துக்கு வாய்ப்புள்ள பகுதிகள், பள்ளிக்கூடம் மற்றும் மருத்துவமனை பகுதிகள் என பிரித்து அந்த இடங்களில் வேகத்தடைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு மண்டலத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும் வேகத்தடை அமைக்கக்கூடிய இடங் களை மண்டல அலுவலர், செயற்பொறியாளர், போக்குவரத்து காவல் ஆய்வாளர், அப்பகுதி மாமன்ற உறுப்பினர், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதி கொண்ட குழு தேர்வு செய்யும். பேருந்து தட சாலைகளில் வேகத்தடை அமைக்கக்கூடிய இடத்தை செயற்பொறியாளர் (பேருந்து தடச்சாலை துறை), கோட்ட பொறியாளர் (தொழில்நுட்ப தணிக்கை குழுமம்), பேருந்து பணிமனை மேலாளர், போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆகியோர் குழுவில் இடம்பெறுவர். குழுபரிந்துரைப்படி கண்காணிப்பு பொறியாளர் (பேருந்து தடச்சாலை துறை) ஆணை களை வழங்குவார்.

செயல்முறை: வேகத்தடை பொருத்தப்பட வேண்டிய வடிவமைப்பானது, அச்சாலை போக்குவரத்து மற்றும் அங்கு கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ள விபத்துக்களை கணக்கில் கொண்டு முடிவு செய்யப்படும். இதற்காக தொழில்நுட்ப குழுவின் அங்கீகாரத்துடன் மூன்று வேகத்தடை மாதிரிகள் தயார் செய்யப்பட்டு மண்டல அளவில் ஒப்பந்தங்கள் கோரப்பட்டு, இப்பணிகள் விரைவில் முடிக்கப்படும்.

உரிய வண்ண கலவை அடிக்கப்பெற்று, ஒளிரும் விளக்குகளுடன், உரிய எச்சரிக்கை பலகைகளும் பொருத்தப்படும். அங்கீகாரம் பெறப்படாத, அவசியமற்ற வேகத்தடைகள் உடனடியாக நீக்கப்படும். அவசியமற்ற வகையில் வேகத்தடைகள் அமைக்க இனிமேல் அனுமதி கிடையாது. வேகத்தடைகள் அமைப்பது குறித்து மேற்கண்ட குழுக்கள்தான் முடிவு செய்யும்.