சாலைப் பணி தொடக்கம்: திருச்செந்தூர் கோயில் வாசல் செல்ல பேருந்துகளுக்கு தடை

Tuesday, 21 January 2014 00:00 administrator நாளிதழ்௧ள் - சாலை௧ள் மேம்பாடு
Print

தினமணி             21.01.2014 

சாலைப் பணி தொடக்கம்: திருச்செந்தூர் கோயில் வாசல் செல்ல பேருந்துகளுக்கு தடை

திருச்செந்தூர் கோயிலுக்குச் செல்லும் சபாபதிபுரம் தெருவில் சாலைப் பணிகள் நடைபெறுவதால் பேருந்துகள் கோயில் வாசல் வரை செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கோயிலுக்கு நாழிக்கிணறு வழியாக செல்வதற்கு சபாபதிபுரம் தெரு வழியாக சாலை உள்ளது. பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளால் இச்சாலை மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. இச்சாலையைச் சீரமைக்க பல்வேறு தரப்பிலிருந்து பேரூராட்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி, தைப்பொங்கல், தைப்பூசம் உள்ளிட்ட முக்கிய திருவிழாக்கள் மற்றும் ஐயப்ப சீசன் போன்ற பல காரணங்களால் நிதி ஒதுக்கியும் இச்சாலையானது சீரமைக்கப்படாமல் இருந்தது.  தற்போது இருபுறங்களும் கான்கிரீட் கற்கள் பதித்து, நடுவில் புதிய தார்ச்சாலை, ரதவீதி-அமலிநகர் சந்திப்பில் தொடங்கி நாழிக்கிணறு டோல்கேட் வரை சுமார் 773 மீ. சாலை ரூ. 73 லட்சத்தில் சீரமைக்கப்பட உள்ளது. இப்பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

பேரூராட்சித் தலைவர் மு.சுரேஷ்பாபு, பேரூராட்சி செயல் அலுவலர் கொ.ராஜையா, உதவி பொறியாளர் சண்முகநாதன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் மு.வடிவேல் உள்ளிட்டோர் இப்பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்க உள்ள மாசிப்பெருந்திருவிழாவுக்கு முன்னதாக இச்சாலை சீரமைப்புப் பணி நிறைவு பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.