பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி

Wednesday, 29 January 2014 10:53 administrator நாளிதழ்௧ள் - சாலை௧ள் மேம்பாடு
Print

தினமலர்           29.01.2014 

பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி

தஞ்சாவூர்: தஞ்சையில், நகராட்சி பகுதியில் சாலைகளை, 14 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணியை நகராட்சி தலைவர் சாவித்திரி, கமிஷனர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தனர். இதனால், பல ஆண்டாக, குண்டும் குழியுமாக காட்சியளித்த சாலைகளுக்கு சாப விமோசனமும், விடிவுகாலமும் கிடைத்துள்ளது. தஞ்சை நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில், 51 வார்டுகள் உள்ளன. பல்வேறு வார்டுகளில் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளித்து, பழுதாகி கிடந்தது. தமிழ்நாடு நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தில், 14 கோடியே, 21 லட்சம் ரூபாய் நிதியை முதல்வர் ஜெ., ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, தஞ்சை நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் சிதிலமடைந்த குண்டு குழி சாலைகளை சீரமைக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது. தஞ்சை நகராட்சிக்கு உட்பட்ட, 37வது வார்டிலுள்ள விக்டோரியா நகர், ஆதிசேஷன் தெருவில் சாலை சீரமைப்பு பணியை நகராட்சி தலைவர் சாவித்திரி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், இன்ஜினியர் சீனிவாசன், உதவி இன்ஜினியர்கள் முத்துலட்சுமி, சங்கீத பிரியா, கவுன்சிலர் சிவக்குமார், அ.தி.மு.க., வார்டு செயலாளர் கிருபாகரன் பங்கேற்றனர்.

தஞ்சை நகராட்சி தலைவர் சாவித்திரி கூறியதாவது: முதல்வர் உத்தரவுப்படி, நகராட்சி சாலைகளை சீரமைக்க, 14 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தஞ்சை நகராட்சி பகுதியில், 51 வார்டுகளிலும் சீரமைக்காமல் இருந்த சாலைகள், 4 பிரிவாக பிரித்து, தார் சாலை போடும் பணி மேற்கொள்ளப்படும். இதன்படி, 6,840 மீ., இரண்டு கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு பிரிவாகவும், 8,240 மீ., 3 கோடி ரூபாய் மதிப்பில் மற்றொரு பிரிவாகவும், 11ஆயிரத்து,920 மீ., 4 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பில் மூன்றாம் பிரிவாகவும், 10ஆயிரத்து,190 மீ., 4 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பில் நான்காவது பிரிவாகவும் பணிகள் நடக்கவுள்ளது. தரமாகவும், விரைவாகவும் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து, தஞ்சையில் முதல்வர் உத்தரவாலும், நகராட்சி அதிரடி நடவடிக்கையாலும் பழுதான சாலைகளுக்கு சாப விமோசனம் கிடைத்துள்ளது. கடந்த முறை தி.மு.க., நகராட்சி தலைவர் பொறுப்பு வகித்தது முதல் இதுவரை, பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாக குட்டை போல மழை நீர் தேங்கிய தெருக்களுக்கு விடிவு காலம் பிறந்துள்ளது. இனிமேல் நகர தெருக்களில் டூவீலர், ஆட்டோ பயணிகள் அவதிப்பட வேண்டியதில்லை என, தஞ்சை நகர மக்கள் தெரிவித்தனர்.