போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரூ. 3.50 கோடியில் இணைப்புச் சாலை

Thursday, 30 January 2014 11:45 administrator நாளிதழ்௧ள் - சாலை௧ள் மேம்பாடு
Print

தினமணி                30.01.2014

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரூ. 3.50 கோடியில் இணைப்புச் சாலை

திருநெல்வேலி நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் 50 அடி அகலத்தில் ரூ. 3.50 கோடி மதிப்பில் இணைப்புச் சாலை அமைக்கப்படுகிறது. இதன் முதல்கட்டப் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. பயண நேரமும் அதிகரிப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு திருநெல்வேலி நகரம் பார்வதிசேஷ மஹால் ஆர்ச் அருகில் இருந்து குறுக்குத்துறையில் அருணகிரி திரையரங்கு வரை 900 மீட்டர் தொலைவில் 50 அகலமுள்ள இணைப்புச் சாலை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

இதையடுத்து புதன்கிழமை அங்கு முதல் கட்டப்பணிகளை மேயர் (பொறுப்பு) பூ. ஜெகநாதன், மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) கே.பி. ஜெயசேவியர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் மாநகராட்சி நிர்வாகப் பொறியாளர் நாராயண்நாயர், மண்டலத் தலைவர்கள் கே. மாதவராமானுஜம், ந. மோகன், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மாநகராட்சி எச்சரிக்கை: திருநெல்வேலி நகரில் ஆர்ச்சில் இருந்து குறுக்குத்துறை வரை இணைப்புச்சாலை அமைக்க எல்லைக்கற்கள் நடப்பட்டுள்ளன. ஆகவே நகரம் பகுதியில் கட்டட இடிபாடுகளை வீட்டின் உரிமையாளர்கள், பொறியாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் மேற்படி இணைப்புச் சாலைக்கு தேர்வு செய்யப்பட்ட தாழ்வான இடத்தில் கொட்டலாம். அதை தவிர்த்து சாலையோரமாகவோ, பொது இடங்களிலோ கொட்டினால் ஒரு லாரி லோடுக்கு ரூ. 10 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் கே.பி. ஜெயசேவியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.