தஞ்சை நகராட்சி பகுதியில் ரூ.14 கோடி மதிப்பில் தார்சாலைகள் அமைக்கும் பணி நகரசபை தலைவி சாவித்திரிகோபால் தொடங்கி வைத்தார்

Friday, 31 January 2014 11:42 administrator நாளிதழ்௧ள் - சாலை௧ள் மேம்பாடு
Print

தினத்தந்தி                30.01.2014

தஞ்சை நகராட்சி பகுதியில் ரூ.14 கோடி மதிப்பில் தார்சாலைகள் அமைக்கும் பணி நகரசபை தலைவி சாவித்திரிகோபால் தொடங்கி வைத்தார்

தஞ்சை நகராட்சி பகுதியில் ரூ.14 கோடி மதிப்பில் தார்சாலைகள் அமைக்கும் பணியை நகரசபை தலைவி சாவித்திரிகோபால் நேற்று தொடங்கிவைத்தார்.

தார்சாலை

தஞ்சை நகராட்சி பகுதியில் 51 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள பல்வேறு சாலைகள் சீரமைக்கப்படாமல் இருந்தது. இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் சீரமைக்கப்படாமல் இருந்த சாலைகளை தார்சாலைகளாக மாற்ற நகராட்சி முடிவு செய்தது. அதன்அடிப்படையில் தமிழ்நாடு நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.14 கோடியே 21 லட்சம் மதிப்பில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

தற்போது இந்த பணி தஞ்சை நகராட்சி 35-வது வார்டில் உள்ள விக்டோரிநகர் ஆதிசேசன் தெருவில் பூமிபூஜையுடன் நேற்று தொடங்கியது. இந்த பணிகளை தஞ்சை நகரசபை தலைவி சாவித்திரிகோபால் தொடங்கி வைத்து பார்வையிட்டார். நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், பொறியாளர் சீனிவாசன், உதவி பொறியாளர்கள் முத்துலட்சுமி மற்றும் சங்கீதபிரியா, கவுன்சிலர் சிவக்குமார், வார்டு அ.தி.மு.க. செயலாளர் கிருபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

ரூ.14 கோடி

பின்னர் நகரசபை தலைவி சாவித்திரிகோபால் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை நகராட்சி பகுதியில் சாலைகளை சீரமைக்க ரூ.14 கோடியே 21 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, உள்ளாட்சித்துறை அமைச்சர் முனுசாமி ஆகியோருக்கும், இதற்கு பரிந்துரை செய்த வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வைத்திலிங்கத்திற்கும் தஞ்சை நகர மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தஞ்சை நகராட்சி பகுதியில் உள்ள 51 வார்டுகளில் சீரமைக்கப்படாமல் இருந்த சாலைகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தார்சாலைகளாக போடப்படுகிறது. அதன்படி 6 ஆயிரத்து 840 மீட்டர் நீளமுள்ள சாலை ரூ.2 கோடியே 72 லட்சம் மதிப்பிலும், 8 ஆயிரத்து 240 மீட்டர் சாலை ரூ.3 கோடி மதிப்பிலும், 11 ஆயிரத்து 920 மீட்டர் சாலை ரூ.4 கோடியே 26 லட்சம் மதிப்பிலும், 10 ஆயிரத்து 190 மீட்டர் சாலை ரூ.4 கோடியே 23 லட்சம் மதிப்பிலும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிகளை தரமானதாகவும், விரைந்து முடிக்கவும் உத்தரவிடப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.