நடப்போருக்கே இனி ரோடு சொந்தம் 'பாத' பாதை: சென்னையை போல், கோவையிலும்...

Friday, 07 February 2014 10:02 administrator நாளிதழ்௧ள் - சாலை௧ள் மேம்பாடு
Print
தினமலர்              07.02.2014   
 
நடப்போருக்கே இனி ரோடு சொந்தம் 'பாத' பாதை: சென்னையை போல், கோவையிலும்...
 
 
கோவை : சென்னை தி.நகர் ரோட்டில், வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பாதசாரிகள் மட்டும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, கோவையில் சில ரோடுகளை பாதசாரிகள் மட்டும் பயன்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சென்னை தி.நகரில், பாதசாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, போக்குவரத்து தடை செய்யப்பட்டதை போன்று, கோவை மாநகராட்சியில் சில ரோடுகளில், பாதசாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, போக்குவரத்துக்கு தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுபற்றி, போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து, திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி முனைப்புடன் செயல்படுகிறது. கோவை மாநகரப்பகுதியில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் போன்ற வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோன்று மக்கள் பெருக்கமும் அதிகரிப்பதால், ரோடுகளில் மக்கள் மற்றும் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. வாகனங்களில் அடிபட்டு பாதசாரிகள் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. கோவையில் வாகன நெரிசல் மிகுந்த ரோடுகளில், பாதசாரிகளுக்காக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

அதை அங்குள்ள கடைக்காரர்கள், நடைபாதை கடைக்காரர்கள், தள்ளுவண்டியினர் ஆக்கிரமித்துள்ளனர். நடைபாதை மாயமாகி விட்டதால், வாகனங்கள் செல்லும் இடத்தில் மக்கள் நடந்து செல்கின்றனர். மனித, வாகன உரசல் ஏற்பட்டு, வாக்குவாதங்களும், போலீஸ் வழக்குகளும் ஏற்படுகிறது. இந்நிலையில், கோவையில் நடந்த போக்குவரத்து மேலாண்மை ஆலோசனை கூட்டத்தில், கோவையில் சில ரோடுகளை தேர்வு செய்து, பாதசாரிகளுக்கான பாதை, சைக்கிள் பாதை, இருசக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்களுக்கு தனித்தனி 'டிராக்' அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதேபோன்று, கோவையில் எட்டு ரோடுகளை தேர்வு செய்து, சர்வதேச தரத்தில் ரோடு அமைக்கவும் திட்டமிடப்பட்டது. இந்த திட்டங்கள் எதுவும் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.மாநகராட்சி கமிஷனர் லதா கூறுகையில், ''கோவையில் நடந்த போக்குவரத்து ஆலோசனை கூட்டத்தில், பொது போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும், பாதசாரிகள், சைக்கிளில் பயணம் செய்வோருக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதன் ஒருபகுதியாக இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டம் வரும்போது, பஸ் போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்துவர். கோவையில் தேர்வு செய்யப்பட்டுள்ள சில ரோடுகள் போக்குவரத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. அந்த ரோட்டிலுள்ள போக்குவரத்துக்கு மாற்றுத்திட்டம் தயாரிக்க வேண்டும். இதுபற்றி போலீஸ் கமிஷனர் தலைமையில் ஆலோசனை செய்து, திட்டத்தை செயல்படுத்த வடிவம் கொடுக்கப்படும்,'' என்றார்.

எந்தெந்த ரோடு

கோவையில் போக்குவரத்தை மாற்றம் செய்து, பாதசாரிகள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் சில ரோடுகளை மாநகராட்சி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. பெரியகடை வீதி, என்.எச்.ரோடு, வெரைட்டி ஹால் ரோடு, ஒப்பணக்காரவீதி, ராஜ வீதி, வ.உ.சி., பூங்கா முன்பக்கரோடு, வ.உ.சி., மைதானத்தை ஒட்டி மேற்கு பக்கமுள்ள இரண்டு ரோடுகளையும் பாதசாரிகள் மட்டும் பயன்படுத்தும் வகையில் வடிவமைப்பு செய்யவும், பராமரிக்கவும் விருப்ப கேட்பு அறிக்கை தயாரிக்க ஏலம் கேட்கவும் மாமன்றம் முடிவு செய்துள்ளது.

பாதசாரிகள் மட்டும் பயன்படுத்தும் ரோடுகளில், தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நடைபாதை ரோடு மேம்படுத்தப்படும். ஒவ்வொரு ௧௦௦ மீட்டருக்கும் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும். தெருவிளக்கு கம்பங்கள் அகற்றப்பட்டு, புதைவடம் பதிக்கப்படும். ஒவ்வொரு ௫௦௦ மீட்டருக்கும், அனைத்து வசதியுடன் கூடிய 'நம்ம டாய்லெட்' அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், வயதானோருக்காக 'பேட்டரி கார்' இயக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.