கண் தான விழிப்புணர்வு வாரம்: மாநகராட்சிப் பள்ளிகளில் கண் பரிசோதனை

Tuesday, 26 August 2014 08:10 administrator நாளிதழ்௧ள் - ௧ல்வி
Print

தினமணி          26.08.2014

கண் தான விழிப்புணர்வு வாரம்: மாநகராட்சிப் பள்ளிகளில் கண் பரிசோதனை

கண் தான விழிப்புணர்வு வாரங்களை முன்னிட்டு சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்குக் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது என எழும்பூர் கண் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் நமீதா புவனேஸ்வரி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியது.

ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி வரையிலான இரண்டு வாரங்கள், கண் தான விழிப்புணர்வு வாரங்களாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதை முன்னிட்டு சென்னையிலுள்ள அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகளில் விழிப்புணர்வு கைப்பிரதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

மேலும் செப்டம்பர் 2-ஆம் தேதி எழும்பூர் பாந்தியன் சாலையில் இருந்து மார்ஷல் சாலை வரை விழிப்புணர்வுப் பேரணி நடைபெறும்.

செப்டம்பர் 8-ஆம் தேதி கண் தானம் வழங்கிய குடும்பத்தினரும், தானம் பெற்ற குடும்பத்தினரும் கலந்து கொள்ளும் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

108 சேவை: இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 108 ஆம்புலன்ஸ் சேவையும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, இறந்துவிட்ட ஒருவருடைய கண்களை அவரது உறவினர்கள் தானமளிக்க விரும்பினால், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவையை அழைக்கலாம்.

அழைத்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அதுபற்றி அருகிலுள்ள கண் வங்கிக்குத் தகவல் கொடுக்கப்படும். கண் வங்கியினர் சென்று குறிப்பிட்ட நேரத்துக்குள் கண்களைத் தானமாகப் பெற்றுக் கொள்வார்கள்.

இதற்காக தமிழகத்தில் உள்ள அரசு, தனியாரைச் சேர்ந்த 69 கண் வங்கிகளுடன் இணைந்து பணியாற்றுகிறோம் என 108 ஆம்புலன்ஸ் சேவையின் மண்டல மேலாளர் பிரபுதாஸ் தெரிவித்தார்.

Last Updated on Tuesday, 26 August 2014 09:48