இணையதளத்தில் டெல்லியின் முப்பரிமாண தோற்றம்

Tuesday, 16 November 2010 05:52 administrator நாளிதழ்௧ள் - மின் ஆளுமை
Print

தினகரன்              16.11.2010

இணையதளத்தில் டெல்லியின் முப்பரிமாண தோற்றம்

புதுடெல்லி, நவ. 16: நாட்டிலேயே முதல் முறையாக டெல்லி நகரின் முப்பரிமாண தோற்றம் விரைவில் இணையதளத்தில் வெளியாக உள்ளது. நகரில் ஆங்காங்கே வயர்லஸ் கேமராக்கள் வைக்கப்படுவதால், அறையில் இருந்தபடி போக்குவரத்தை கட்டுப்படுத்துவது, அங்கீகாரமற்ற கட்டுமானங்களையும் கண்காணிப்பது என்று சகல பணிகளையும் மேற்கொள்ள முடியும்.

லேண்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்’ (எல்..எஸ்.) என்ற பெயரில் நகரின் முப்பரிமாண தோற்றத்தை உருவாக்கும் திட்டத்துக்காக மாநில அரசு ரூ120 கோடி ஒதுக்கியது.

இத்திட்டத்தை மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை செயல்படுத்தி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் நகரின் மருத்துவமனைகள், பூங்காக்கள், சாலைகள், தெருக்கள், பூமிக்கடியில் செல்லும் போன் கேபிள், குடிநீர் குழாய்கள், சமையல் எரிவாயு குழாய்கள், கழிவு நீர் குழாய்கள் போன்ற எல்லாவற்றையும் டிஜிட்டல் வடிவத்தில் படம் பிடித்து கம்ப்யூட்டரில் பதிவு செய்துள்ளது. இதேபோல் கட்டிடங்களின் படங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

மொத்தத்தில் கம்ப்யூட்டரில் வீடியோ கேமில் பார்ப்பது போன்று ஒரு சாலையில் இருந்து அப்படியே கடந்து கொண்டே சென்று நகரை பார்க்கலாம். அதேபோல், ஆகாய மார்க்கமாக விமானத்தில் இருந்து பார்ப்பது போன்றும் பார்க்கலாம். இந்த முப்பரிமாண நகரின் டிஜிட்டல் வரைபடம் தயாரிப்பு திட்டம் முடிவடையும் தருவாயில் உள்ளது. அடுத்த மாதத்தில் இதற்கான பணிகள் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டிலேயே எந்த நகரத்தின் முப்பரிமாண வரைபடமும் இதுவரையில் தயாரிக்கப்படவில்லை. டெல்லி அரசுதான் முதல் முறையாக இத்தகைய வரைபடத்தை தயாரிக்கிறது. இத்திட்டத்தின் அடுத்தக்கட்டம் நகரின் எல்லா பகுதிகளிலும் வயர்லஸ் கேமரா பொருத்தப்பட்டு இந்த டிஜிட்டல் வரைபடத்துடன் இணைக்கப்படும். இதைக் கொண்டு போக்குவரத்து நெரிசலை எப்படி தீர்க்க முடியும் என்பதை போலீசார் உடனடியாக முடிவு எடுக்க முடியும். அதாவது ஒரு இடத்தில் நெரிசல் ஏற்பட்டால், அதற்கு முன்னதாக எந்த வழியில் இருந்து போக்குவரத்தை திருப்பி விட முடியும் என்பதை அறையில் இருந்தபடியே பார்த்து அப்பகுதியில் உள்ள போலீசாருக்கு உத்தரவிட முடியும்.

இதேபோல் ஏற்கனவே கட்டிடங்களின் படங்கள் அனைத்தும் உள்ளதால், அனுமதியின்றி யாராவது கட்டிடம் கட்டுவதோ, முன் அனுமதி இல்லாமல் சாலைகளை தோண்டுவதோ போன்றவற்றை கண்காணிக்கலாம். இயற்கை சீற்ற காலங்களில் பொதுமக்களை பாதுகாக்க இந்த முப்பரிமாண வரைபடம் மிகவும் உதவும்.

விரைவில் இந்த முப்பரிமாண வரைபடம் இணையதளத்தில் வெளியிடப்படும். இந்த இணையத்தில் அரசின் எல்லா துறைகளும் இணைக்கப்பட உள்ளன. இதனால் ஒரே இணையதளத்தில் அரசு சம்பந்தப்பட்ட எல்லா விவரங்களையும் பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியும்.

நாட்டிலேயே முதல் முறை