"கிரெடிட் கார்டு' மூலம் வரி வசூல் சேலம் மாநகராட்சியில் புது திட்டம்

Wednesday, 01 December 2010 00:00 administrator நாளிதழ்௧ள் - மின் ஆளுமை
Print

தினமலர்             01.12.2010

"கிரெடிட் கார்டு' மூலம் வரி வசூல் சேலம் மாநகராட்சியில் புது திட்டம்

சேலம்: சேலம் மாநகராட்சியில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வரி செலுத்தும் முறை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மண்டல அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு வரி வசூல் செய்யப்படுகிறது. மேலும், சூரமங்கலம், செவ்வாய்ப்பேட்டை அப்பு செட்டி தெரு, கொண்டலாம்பட்டி ஆகிய இடங்களில் கூடுதலாக வரி வசூல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் ஏழு இடங்களில் வரி செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டும், பல வார்டுகளில் பொதுமக்கள் முறையாக வரி செலுத்தாமல் அலட்சியம் காட்டினர். கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் நடமாடும் கம்ப்யூட்டர் வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது. குடியிருப்பு பகுதிகளுக்கு நேரடியாக சென்று வரி வசூல் செய்வதற்கு பொதுமக்களிடம் வரவேற்பு இருந்தது. கூடுதலாக மூன்று வரி வசூல் வாகனங்கள் இயக்கப்பட்டது. நான்கு மண்டல அலுவலகங்களிலும் சுழற்சி அடிப்படையில் நடமாடும் கம்ப்யூட்டர் வாகனம் மூலம் வரி வசூல் பணி மேற்கொள்ளப்படுகிறது. சேலம் மாநகராட்சியில் வரியினம் மற்றும் வரியில்லா இனங்களின் நிலுவை மற்றும் நடப்பு வரிகளை செலுத்த கூடுதலாக பல்வேறு வசதிகளை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆன்- லைன், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் செக் போன்றவற்றை பெற்று வரி வசூல் செய்து கொடுக்க ஐ.டி.பி.., வங்கி முன் வந்துள்ளது. மாநகராட்சியின் வரவு- செலவு நடவடிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு வார்டு அலுவலகத்துக்கும் தனித்தனியாக சேமிப்பு கணக்குகளை ஐ.டி.பி.., வங்கியில் துவங்கி வசூல் நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் தீவிர பரிசீலனை செய்தனர். மாநகராட்சி மன்ற கூட்டத்தில் அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் வரவேற்பு இருந்தால், அரசு அனுமதி அளித்துள்ள பிற வங்கிகளிலும், விதிமுறைகளுக்கு உட்பட்டு வரி வசூல் பணி மேற்கொள்வது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றனர். விரைவில் இத்திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.