வரி பாக்கி பட்டியல்; சூடு கிளப்புகிறது கோவை மாநகராட்சி இணையதளம்

Sunday, 05 December 2010 00:00 administrator நாளிதழ்௧ள் - மின் ஆளுமை
Print

தினமலர்               05.12.2010

வரி பாக்கி பட்டியல்; சூடு கிளப்புகிறது கோவை மாநகராட்சி இணையதளம்

கோவை:கோவை மாநகராட்சியில் அதிகமான வரி பாக்கி வைத்துள்ளவர்களின் பட்டியல், மாநகராட்சி இணையதளத்தில் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம் 359 கோடி ரூபாய் வருமானமுள்ள கோவை மாநகராட்சிக்கு செலவு, 381 கோடி ஆகிறது. இதனால், 21 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பற்றாக்குறை உள்ளது. இத்துடன், புனரமைப்புத் திட்டத்தில் நிறைவேற்றப்படும் பல திட்டங்களுக்கும் 30 சதவீத பங்களிப்பை வழங்க வேண்டிய கட்டாயம் உள்ளது.திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், பாதாள சாக்கடைத் திட்டம், பில்லூர் 2வது குடிநீர்த் திட்டம், நகர்ப்புற ஏழை மக்களுக்கான அடிப்படை வசதிகள் (பி.எஸ்.யு.பி.,) ஆகிய திட்டங்களுக்காக பல கோடி ரூபாய் நிதி, மாநகராட்சிக்கு தேவைப்படுகிறது.

ஏற்கனவே, பற்றாக்குறையும், கடனும் அதிகரித்துள்ள நிலையில், 126 கோடி ரூபாய் மதிப்பில் 8 குளங்களை மேம்படுத்தும் திட்டத்துக்கு 30 சதவீதப் பங்களிப்பை தர இயலாத சூழல், மாநகராட்சிக்கு உள்ளது.இதனால், இத்திட்டம் கை விடப்படுமென்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மட்டுமின்றி, மழை நீர் வடிகால், போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டம், சுரங்க நடைபாதைகள் உள்ளிட்ட பல திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமெனில், மாநகராட்சியின் வருவாயை இரட்டிப்பாக்க வேண்டியது அவசியம். இதற்காகவே, சாதாரண ஏழை மக்களுக்கும் கூட குடிநீர்க் கட்டணம், சொத்து வரி என பல வரிகளையும் மாநகராட்சி உயர்த்தியுள்ளது.பொது மக்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல், அந்தக் கட்டணத்தைச் செலுத்தி வருகின்றனர். ஆனால், பல நூறு கோடி ரூபாய் சொத்துக்களும், ஆண்டுக்கு பல கோடி வருமானமும் கொண்ட பல பெரிய நிறுவனங்களும், தொழிலதிபர்களும் பல கோடி ரூபாய் அளவுக்கு வரி பாக்கி வைத்திருப்பது, இந்த நகரின் எதிர்கால வளர்ச்சியை கேள்விக்குறியாக்கியுள்ளது.மாநகராட்சி வருமானத்தை அதிகரிப்பதற்காக, அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, பல ஆண்டுகளாக வசூலிக்கப்படாத வாடகை, வரி பாக்கி ஆகியவை வசூலிக்கப்பட்டுள்ளன.

கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான பல ஆயிரம் வாடகைக்கடைகளில், 2,530 கடைகளைச் சேர்ந்தவர்கள், கடந்த பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் இழுத்தடித்து வந்துள்ளனர். இந்த வாடகை பாக்கி பட்டியலைப் பார்த்து, வசூல் செய்ய வேண்டிய பல அதிகாரிகளும், அவ்வப்போது சென்று கடைக்காரர்கள் "கொடுப்பதை' வாங்கிக் கொண்டு, வாடகையை வசூலிக்காமல் காலம் கடத்தி வந்தனர்.ஆனால், கடந்த மாதத்தில் புது விதமான அதிரடி மேற்கொள்ளப்பட்டது; வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளின் பட்டியலைக் கையில் வைத்துக் கொண்ட அதிகாரிகள், பூட்டு, சாவி சகிதமாக கடைகளுக்குச் சென்று அவற்றைப் பூட்டி "சீல்' வைக்க ஆரம்பித்தனர். அவற்றை மறு ஏலம் விடவும் ஏற்பாடு செய்தனர். இதனால், அலறியடித்த கடைக்காரர்கள், உடனடியாக வாடகைத் தொகையைச் செலுத்தினர்.இவ்வாறு வசூலான தொகை மட்டும், 8 கோடி ரூபாய். அடுத்த அதிரடியாக, சொத்து வரி பாக்கி வைத்துள்ள நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களை நோக்கி, மாநகராட்சி அதிகாரிகளின் படையெடுப்பு துவங்கியுள்ளது.

மண்டலத்துக்கு 25 பேர் வீதமாக, 100க்கும் அதிகமான அலுவலர்கள், வரி வசூலில் இறங்கியுள்ளனர். மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரம் வரி விதிப்புகள், கோவை மாநகராட்சியில் உள்ளன.இவற்றில், 70 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்கப்பட வேண்டும்; இதுவரையிலும், 35 கோடி ரூபாய் வரை வரி வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்.15க்கும் இந்த தொகை செலுத்தப்பட்டிருக்க வேண்டும். வரி செலுத்தாதவர்களின் வீடுகளில் முதற்கட்டமாக குடிநீர் இணைப்பையும், அடுத்த கட்டமாக பாதாள சாக்கடை இணைப்பையும் மாநகராட்சி அலுவலர்கள் துண்டித்து வருகின்றனர்.


பாதாள சாக்கடை இணைப்பு இல்லாதபட்சத்தில், மாநகராட்சி சட்டத்தின் அடிப்படையில் ஜப்தி நடவடிக்கையில் இறங்கவும் முடிவு செய்துள்ளனர். இதற்கு முன்னோட்டமாக, அதிகளவில் வரி பாக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலை, கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் இணையதளத்தில் மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில், கோவையிலுள்ள பெரிய நிறுவனங்கள் பல இடம் பெற்றுள்ளன.சாதாரண அப்பாவி மக்களின் வீடுகளில், வரி பாக்கிக்காக குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாநகராட்சி நிர்வாகம், இந்த நிறுவனங்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை மக்கள் உன்னிப்பாய்க் கவனித்து வருகின்றனர்.நாங்கள் சட்டத்தை உடைப்பவர்களில்லைகோவை மாநகராட்சிக்கு அதிகளவு வரி பாக்கி வைத்துள்ளவர்களின் பட்டியல், கோவை மாநகராட்சி இணையதளத்தில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டில், 200 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் பெயர்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

இந்த பட்டியலில், இரண்டாவது ஆண்டாக முதலிடம் பிடித்து இருப்பது, பிரபல பி.எஸ்.ஜி., அறக்கட்டளையாகும்.முதல் 3 இடங்களுடன், 5வது இடத்தையும் இந்த நிறுவனம் "தக்க' வைத்துக் கொண்டிருக்கிறது. நான்காவது இடத்தில், "புரூக்பீல்ட்ஸ்' நிறுவனம் உள்ளது; இந்த நிறுவனம் வைத்துள்ள வரி பாக்கி, 49 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய். பி.எஸ்.ஜி., அறக்கட்டளைக்குச் சொந்தமான கட்டடங்களுக்கு மட்டும், 3 கோடியே 37 லட்சத்து 80 ஆயிரத்து 783 ரூபாய் வரி பாக்கி இருப்பதாக அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.சேரன் சிட்பண்ட்ஸ் நிறுவனம் மற்றும் சேரன் டவர்ஸ் நிறுவனங்களுக்கு 20 லட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகை, வரி பாக்கி இருக்கிறது. லட்சுமி மில்ஸ், தியாகராஜர் மில்ஸ், சக்தி சுகர்ஸ், கங்கா டெக்ஸ்டைல்ஸ், .சி.சி., மருத்துவமனை, தமிழ் விஸ்வகர்மா கல்யாண மண்டபம், நீலகிரி டைரி பார்ம் என ஏராளமான நிறுவனங்களுக்கும், 100க்கும் மேற்பட்ட தனி நபர்களுக்கும் இதில் இடம் கிடைத்துள்ளது.இணையதளத்தில் பட்டியலை வெளியிட்ட பின், பல நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், தனி நபர்களும் முன் வந்து, சொத்து வரி பாக்கியைச் செலுத்தி வருகின்றனர். சில நிறுவனத்தினர், "தங்களது சொத்துக்கள், அறக்கட்டளைக்குச் சொந்தமானவை என்பதால், சொத்து வரி செலுத்தவே தேவையில்லை' என்று வாதிடுகின்றனர். சட்டரீதியாகவும் பல ஆண்டுகளாக இவர்கள் போராடி வருகின்றனர்.பி.எஸ்.ஜி., விளக்கம்:வரி பாக்கி பட்டியலில் இடம் பெற்றிருப்பது குறித்து, பி.எஸ்.ஜி., குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரி சி.ஆர்.சுவாமிநாதனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: எங்களது கல்வி நிறுவனங்கள் அனைத்தும், சிங்காநல்லூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இருந்தன. அறக்கட்டளையின் கீழ் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் என்பதால், அனைத்துக்கும் சட்டப்படி வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. 1981ல் கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டபோதும், இதே நிலை நீடித்தது.

கடந்த 1985ல் மருத்துவக் கல்லூரிக்கு நாங்கள் அனுமதி பெற்று, 1989ல் அதைத் துவக்கினோம்.மருத்துவமனையையும் துவக்கி, 70 சதவீதம் வரையிலும் ஏழைகளுக்கு மருத்துவ சேவை செய்து வருகிறோம். இன்று வரையிலும், 500 ரூபாய்க்கு மகப்பேறு சிகிச்சை தரப்படுகிறது. இந்த மருத்துவமனைக்கு, சொத்து வரி செலுத்த வேண்டுமென்று கடந்த 1992லேயே மாநகராட்சியால் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எங்களது விளக்கத்தை மாநகராட்சி ஏற்காததால், நாங்கள் கோர்ட்டுக்குச் சென்றோம்; இன்னும் அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

அலுவலர் குடியிருப்புக்கு நாங்கள் சொத்து வரி செலுத்தி வருகிறோம்; இந்த குடியிருப்புக்கு முதலில் வடக்கு மண்டல அலுவலகத்திலிருந்து சொத்து வரி விதிப்பு நோட்டீஸ் வந்தது; அதைச் செலுத்தினோம்; சர்வே எண்ணை மாற்றி விட்டு, அதே குடியிருப்புக்கு கிழக்கு மண்டலத்திலிருந்தும் நோட்டீஸ் அனுப்புகின்றனர். ஒரே இடத்துக்கு 2 தொகையை எப்படிச் செலுத்துவது?. இந்த குழப்பத்தை இன்று வரை அவர்கள் தீர்க்கவில்லை.அதிலுள்ள தொகையைத்தான், இப்போது 3 கோடி ரூபாய் வரி பாக்கி என்று மாநகராட்சி நிர்வாகம் கூறுகிறது. அறக்கட்டளைக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டுமெனில், மாநகராட்சி மன்றத்திற்கு கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்கின்றனர். எங்களுடைய வேறு சில கல்வி நிறுவனங்களுக்கு வரி விலக்குப் பெற, நாங்கள் எந்த கோரிக்கையையும் அளித்ததில்லை.அதேபோல, கடந்த பல ஆண்டுகளாக நாங்கள் புதிதாகக் கட்டி வரும் கட்டடங்களும், அனுமதியற்ற கட்டடம் என்று செய்தி பரப்பப்படுகிறது. கட்டடம் கட்ட முறைப்படி, மாநகராட்சிக்கு விண்ணப்பித்து, கட்டட உரிமத்தொகையாக 84 லட்ச ரூபாய் செலுத்தியிருக்கிறோம். விண்ணப்பத்தை வாங்கிக் கொண்டு 6 மாதங்களுக்கு மேலாகியும், நகர ஊரமைப்புத்துறைக்கு மாநகராட்சி நிர்வாகம் அனுப்புவதேயில்லை.நாங்களும் பொறுத்துப் பார்த்து, 6 மாதங்களுக்குப் பின்பே கட்டடங்களைக் கட்டுகிறோம். அனுமதியற்ற கட்டடம் என்று கூறி, அதற்கும் வரி விதிப்பு செய்ய முயன்றனர்; அதை எதிர்த்தும் நாங்கள் சட்டரீதியாக போராடுகிறோம்.

நீதிமன்றம் உத்தரவிடும்பட்சத்தில், வரி உள்ளிட்ட எந்தக் கட்டணத்தையும் செலுத்தத் தயார். நாங்கள் ஒன்றும் சட்டத்தை உடைப்பவர்களில்லை; இந்த சமூகத்தின் மீது எங்களுக்கும் நிறையவே அக்கறை இருக்கிறது.இவ்வாறு,சுவாமிநாதன் தெரிவித்தார். முன் மாதிரியாக இருக்க வேண்டும்!கோவை மாநகராட்சி உதவி கமிஷனர் (வருவாய்) சுந்தர்ராஜன் கூறுகையில், ""அறக்கட்டளைக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களுக்கு வரி விலக்கு கொடுக்கலாம்; ஆனால், அதற்கு மாநகராட்சி மன்றத்தில் முறைப்படி அங்கீகாரம் பெற வேண்டும். பி.எஸ்.ஜி., அறக்கட்டளை நிர்வாகிகள், அது போன்ற எந்த அனுமதியையும் பெறவில்லை. எல்லாத்தரப்பினரும் ஒத்துழைத்தால்தான், மாநகராட்சிக்கு அதிக வருவாய் கிடைக்கும்; பல புதிய திட்டங்களை நகர மேம்பாட்டுக்காகச் செயல்படுத்த முடியும். இந்த விஷயத்தில், பெரிய நிறுவனங்கள் அனைத்தும் முன் மாதிரியாக செயல்பட வேண்டுமென்பதுதான் மாநகராட்சி நிர்வாகத்தின் எதிர்பார்ப்பு. எந்த நிறுவனத்துக்கும் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டுமென்பது, அதிகாரிகளின் நோக்கமில்லை,'' என்றார்.