பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை ஆன்லைனில் எடுக்கும் வசதி

Friday, 27 July 2012 05:49 administrator நாளிதழ்௧ள் - மின் ஆளுமை
Print

தினமலர்                 27.07.2012

பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை ஆன்லைனில் எடுக்கும் வசதி

திருநெல்வேலி : நெல்லை மாநகராட்சியில் கடந்த 3 மாதங்களாக பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவுகளை இலவசமாக ஆன்லைன் மூலம் எடுக்க முடியாமல் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். சென்னைக்கு அடுத்தப்படியாக நெல்லை மாநகராட்சியில் மட்டுமே அமலில் இருந்த இந்த வசதி மீண்டும் எப்போது கிடைக்கும் என மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெறவேண்டும் எனில் மாநகராட்சி சேவை மையத்தில் விண்ணப்பம் பெற்று, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கோர்ட் பீ மனு ஸ்டாம்ப் ஒட்டி, சுகாதார ஆய்வாளரிடம் கையெழுத்து பெற்று, அதற்குரிய கட்டணத்தை கருவூலத்தில் (டிரசரி) செலுத்தி 2 நாட்கள் காத்திருக்கும் நிலை இருந்தது. இதை தவிர்க்க சென்னை மாநகராட்சிக்கு அடுத்தப்படியாக நெல்லை மாநகராட்சியில் தனி சாப்ட்வேர் உருவாக்கப்பட்டு, பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இண்டர்நெட் வசதியை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் எடுக்கும் வசதி கடந்த ஓராண்டிற்கு முன் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. 98ம் ஆண்டில் இருந்து பிறந்தவர்கள், இறந்தவர்கள் குறித்த சான்றிதழ்களை ஆன்லைன் வசதி மூலம் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டது. 98ம் ஆண்டிற்கு முன்பு பிறப்பு, இறப்பு விபரங்களை அதற்குரிய படிவங்களை நிரப்பி மட்டுமே சான்றிதழாக பெறமுடியும்.

ஆன்லைன் வசதியை பயன்படுத்தி இண்டர்நெட் இணைப்பு வைத்திருப்பவர்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை ஆன்லைனில் எடுத்து பயன்படுத்தினர். இதன் மூலம் மக்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து காத்திருந்து வீண் அலைச்சலும், கால விரையம் ஆவதும் தவிர்க்கப்பட்டது. இதனால் மாநகராட்சி பணியாளர்களுக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவதில் இருந்த பணிச்சுமையும் ஓரளவு குறைந்தது.

நெல்லை மாநகராட்சி பகுதியில் இந்த வசதியை பயன்படுத்தி தினமும் 200 முதல் 300 வரையிலான மேற்பட்டவர்கள் ஆன்லைன் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை எடுத்து பயன்படுத்திவந்தனர்.

8 லட்சம் முறை பார்வை!

இண்டர்நெட் பிரவுசிங் செண்டர்கள் வைத்திருப்பவர்கள் இந்த வசதியை பயன்படுத்தி பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை மக்களுக்கு வழங்கினார். ஆனால் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை கம்ப்யூட்டரில் பிரிண்ட் எடுத்து தர ஒரு நகலுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை வசூலித்தனர். இதனால் தினமும் 200க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் இண்டர்நெட் மையங்கள் மூலம் எடுக்கப்பட்டு விற்பனையாகின. இண்டர்நெட் ஆன்லைன் வசதியில் பிறப்பு குறித்த விபரங்களை 5 லட்சம் முறையும், இறப்பு குறித்த விபரங்களை 3 லட்சத்திற்கும் அதிகமான முறையும் பயன்படுத்தப்பட்டிருப்பதாக மாநகராட்சி புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் சீராகும்...

இந்த பிரச்னை குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "நெல்லை மாநகராட்சி இண்டர்நெட் இணைப்பில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரவுட்டர் பிரச்னை ஏற்பட்டது. மேலும் புதிய பைபர் கேபிள் இணைப்பு போடப்பட்டு, ரவுட்டரும் புதிதாக வாங்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னையை சரிசெய்யும் பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. இன்னும் ஒரு வாரத்தில் இண்டர்நெட் இணைப்புகள் சீராக்கப்பட்டு பிரச்னை சரிசெய்யப்படும். அதன்பின் மாநகராட்சி விபரங்கள் அனைத்தும் இண்டர்நெட் இணைப்பு மூலம் கம்யூட்டரில் பார்த்துக் கொள்ளலாம். மேலும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களையும் இண்டர்நெட் மூலம் ஆன்லைனில் எடுத்துக் கொள்ளலாம் என்றார்'.

சென்னைக்கு அடுத்தப்படியாக நெல்லை மாநகராட்சியில் மட்டுமே இண்டர்நெட் ஆன்லைன் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ் எடுக்கும் வசதியை நெல்லை மாநகராட்சியில் விரைவில் மீண்டும் அமல்படுத்தவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.