குப்பை லாரிகளை கண்காணிக்க ஜி.பி.எஸ். கருவி

Friday, 31 August 2012 10:32 administrator நாளிதழ்௧ள் - மின் ஆளுமை
Print

தினகரன்           31.08.2012

குப்பை லாரிகளை கண்காணிக்க ஜி.பி.எஸ். கருவி

திருப்பூர் மாநகராட்சியில் சுமார் 100 வாகனங்களில் குப்பை அள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்கு சொந்தமான வாகனங்களுக்கான பெட்ரோல், டீசல் நிரப்பும் விவரங்கள், இயக்கப்படும் தூரம் ஆகியவை ‘லாக்’ புத்தகத்தில் முறையாக பதிவு செய்யப்படும். திருப்பூர் மாநகராட்சியில் குறிப்பிட்ட நடை (டிரிப்) மட்டும் குப்பைகளை அள்ளிவிட்டு, கூடுதல் நடை ஓட்டியதாக கணக்கு காட்டப்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் வருகின்றன. இதனால், மாநகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது. பணிகளும் முறையாக நடப்பதில்லை.

திருப்பூர் மாநகராட்சியில் உள்ள குப்பை அள்ளும் வாகனங்களுக்கு ஜி.பி.எஸ். எனும் புவியிடங் காட்டி கருவியை பொருத்தி கண்காணிக்க திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் கூறுகையில், ‘‘திருப்பூர் மாநகராட்சியில் உள்ள குப்பை அள்ளும் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவிகளை பொருத்தி, அந்த வாகனங்களை கண்காணிக்க திட்டமிட்டுள்ளோம். இந்த கருவியை வாகனங்களில் பொருத்துவதன் மூலம் வாகனங்கள் எந்தெந்த பகுதிக்கு செல்கிறது என்ற விவரத்தை 100 சதவீதம் முழுமையாக கண்காணிக்க முடியும். வாகனங்களுக்கு அடிக்கப்படும் பெட்ரோல், டீசல் விவரங்கள், வாகனத்தை ஓட்டி செல்லும் டிரைவர், வாகனம் ஓட்டப்பட்ட நடை விவரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் முழுமையாக தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் தேவையில்லாத எரிபொருள் செலவு குறைவதுடன், பணிக்காலத்தில் டிரைவர்கள் ஏமாற்றுவதும் தவிர்க்கப்படும். விரைவில் இத்திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது,’’ என்றார்.