தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் தமிழகத்தில் முதல் முறையாக ஜிபிஎஸ் கருவியுடன் மின்விளக்கு நகராட்சி நடவடிக்கை

Friday, 05 April 2013 09:14 administrator நாளிதழ்௧ள் - மின் ஆளுமை
Print

தினகரன்                  05.04.2013

தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் தமிழகத்தில் முதல் முறையாக ஜிபிஎஸ் கருவியுடன் மின்விளக்கு நகராட்சி நடவடிக்கை


தாம்பரம்: தாம்பரம் நகராட்சி சார்பில் தமிழகத்திலேயே முதன் முறையாக ஜி.எஸ்.டி. சாலையில் ரூ2 கோடி செலவில் ஜிபிஎஸ் கருவியுடன் தெருவிளக்கு அமைக்கப்படுகிறது.

தாம்பரம் நகராட்சி சார்பில் ஜிஎஸ்டி சாலை யில் ரூ2 கோடி மதிப்பில் 180 தெருவிளக்குகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த விளக்குகள் மற்றும் கம்பங்கள் அகற்றப் பட்டு, புதிதாக சாலையின் நடுவே 9 மீட்டர் உயரத்தில், 28 மீட்டர் இடைவெளியில், 3 கிலோ மீட்டர் தூரம் மின் விளக்குகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இங்கு அதிக போக்குவரத்து இருப்பதால் இந்த நவீன மின்விளக்குகள் அமைக்கப்படுகிறது.

இதுகுறித்து நகராட்சி தலைவர் கரிகாலன் கூறுகையில், இங்குள்ள மின்விளக்கு 270 வாட்ஸ் கொண்டவை. இப்போது அமைக்கப்படும் மின்விளக்கு 210 வாட்ஸ். நள்ளிரவு நேரத்தில் தானாகவே 210ல் இருந்து 150 வாட்சாக குறையும். இதனால், மின்சாரம் சேமிக்கப்படும். மேலும் மாதம் ரூ4 லட்சம் நகராட்சி மூலம் மின்வாரியத்துக்கு செலுத்தப்படுகிறது. இந்த தொகையும் குறையும்.

இந்த நவீன மின்விளக்குகள் அமைக்கப்படுவதால், ரூ2.50 லட்சம் மட்டும் மின்வாரியத்துக்கு கட்டவேண்டி வரும். இந்த மின்விளக்குகளில் ஜிபிஎஸ் கருவியும் பொருத்தப்படுகிறது. இதனால், அலுவலகத்தில் இருந்து மின்விளக்குகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், பராமரிக்கவும் முடியும். ஏப்ரல் 14ம் தேதி இந்த விளக்குகள் இயக்கப்படும் என்றார். தற்போது, தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சி வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.