வார்டுகளில் குப்பை, தெருவிளக்கு, குடிநீர் பிரச்சினையா? எஸ்.எம்.எஸ். மூலம் தீர்வு காணும் திட்டம் அறிமுகம் மேயர் செ.ம.வேலுச்சாமி தொடங்கி வைத்தார்

Wednesday, 03 April 2013 00:00 administrator நாளிதழ்௧ள் - மின் ஆளுமை
Print
தினத்தந்தி        03.04.2013

வார்டுகளில் குப்பை, தெருவிளக்கு, குடிநீர் பிரச்சினையா? எஸ்.எம்.எஸ். மூலம் தீர்வு காணும் திட்டம் அறிமுகம் மேயர் செ.ம.வேலுச்சாமி தொடங்கி வைத்தார்


கோவை மாநகராட்சி வார்டுகளில் மக்கள் பிரச்சினைகளை எஸ்.எம்.எஸ். மூலம் தீர்வு காணும் திட்டத்தை மேயர் செ.ம.வேலுச்சாமி தொடங்கி வைத்தார்.

எஸ்.எம்.எஸ் திட்டம்

கோவை மாநகராட்சி மக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தெரிந்து கொண்டு எஸ்.எம்.எஸ் மூலம் தீர்வு காணும் திட்ட தொடக்க விழா கோவை மாநகராட்சி வளாகத்தில் நடந்தது. இதை கோவை மாநகராட்சி மேயர் செ.ம.வேலுச்சாமி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்த சேவையை கோவை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த எஸ்.எம்.எஸ் திட்டத்தின் கீழ், பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் குப்பைகள் அகற்றப்படாமல் இருத்தல், சாக்கடை சுத்தம் செய்தல், தெருவிளக்கு எரியாமல் இருத்தல், மற்றும் குடிநீர் பிரச்சினைகளை 92822 02422 என்ற எண்ணிற்கு தங்களின் வீதியின் பெயர், மற்றும் வார்டு எண்ணை குறிப்பிட்டு அனுப்பி வைக்கலாம்.

தீர்வு காணப்படும்

இவ்வாறு பெறப்படும் இந்த எஸ்.எம்.எஸ் செய்தி மக்கள் குறை தீர்ப்பு புகார் மென் பொருள் மூலம் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். உடனே 5 பேர் கொண்ட குழு அந்தந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உடனடியாக பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். புகார்கள் பெற்றமைக்கான ஒப்புகையும் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.  புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னரும், குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பி வைக்கப்படும். இந்த திட்டம் மக்கள் வீட்டில் இருந்தே குறைகளை அனுப்பி அதை நிவர்த்தி செய்யும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், மாநகராட்சி கமிஷனர் க.லதா, துணை மேயர் லீலாவதி உன்னி, துணை கமிஷனர் சிவராசு, மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.