துப்பரவுத் தொழிலாளர்களின் வருகை இணையதளத்தில் தினமும் வெளியீடு

Wednesday, 10 July 2013 08:05 administrator நாளிதழ்௧ள் - மின் ஆளுமை
Print

தினமணி              10.07.2013

துப்பரவுத் தொழிலாளர்களின் வருகை இணையதளத்தில் தினமும் வெளியீடு

தெற்கு தில்லி மாநகராட்சிக்கு உள்பட்ட மத்திய மண்டலத்தில் பணியாற்றும் துப்பரவுத் தொழிலாளர்களின் வருகை விவரம் இணையதளத்தில் நாள்தோறும் வெளியிடப்படவுள்ளது.

துப்புரவுத் தொழிலாளர்களில் சுமார் 50 சதவீதத்தினர் அவர்களுக்கு ஒதுக்கப்படும் தெருக்களுக்குச் செல்வதில்லை என்று மாநகராட்சி ஆணையருக்கு புகார்கள் வந்ததையடுத்து, பயோ மெட்ரிக் முறையில் வருகையைப் பதிவு செய்யும் ஊழியர்களின் வருகை விவரத்தை இணையதளத்தில் வெளியிட தெற்கு தில்லி மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

வருகைப் பதிவு தொடர்பாக மண்டல அலுவலகங்களுக்கு தெற்கு தில்லி மாநகராட்சி ஆணையர் மணீஷ் குப்தா செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "மத்திய மண்டலத்தில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்களின் வருகை விவரம் சோதனை அடிப்படையில் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, தெற்கு மாநகராட்சிக்கு உள்பட்ட நஜஃப்கர், தெற்கு, மேற்கு மண்டலங்களில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்களின் வருகை விவரம் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் மணீஷ் குப்தா செவ்வாய்க்கிழமை கூறியது:

தெற்கு மாநகராட்சிக்கு உள்பட்ட மண்டலங்களில் துப்புரவுத் தொழிலாளர்கள் பணிக்கு வருவதை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் தங்கள் தெருவுக்கோ, பகுதிக்கோ பணியாற்றவரும் தொழிலாளர் யார்? எத்தனை மணிக்கு அவர் பணிக்கு வந்துள்ளார் போன்ற விவரத்தை குடியிருப்புவாசிகளால் அறிந்து கொள்ள முடியும்.

வருகைப் பதிவு செய்த தொழிலாளர் தங்கள் பகுதிக்கு வரவில்லை என்றால் உடனே அப்பகுதிவாசிகள் மாநகராட்சிஅலுவலகத்துக்கு தெரிவிக்கலாம் என்றார் அவர்.

தெற்கு தில்லி மாநகராட்சிக்கு உள்பட்ட மண்டலங்களில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்கள், அதிகாரிகளின் வருகையை "பயோ-மெட்ரிக்' முறையில் பதிவு செய்யும் வழக்கம் 2008-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.