தூய்மைப் பணியிலும் உயர் தொழில்நுட்பம் கழிப்பிடம் பராமரிக்க, "ஸ்மார்ட் போன்'

Friday, 12 July 2013 11:35 administrator நாளிதழ்௧ள் - மின் ஆளுமை
Print

தினமலர்              12.07.2013

தூய்மைப் பணியிலும் உயர் தொழில்நுட்பம் கழிப்பிடம் பராமரிக்க, "ஸ்மார்ட் போன்'

கோவை:கோவை மாநகராட்சியில் பொதுக் கழிப்பிடங்களை பராமரிக்கவும், மேம்படுத்தவும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்களுக்கு "ஸ்மார்ட் போன்' வழங்கப்பட்டது.

மாநகராட்சியிலுள்ள பொதுக்கழிப்பிடங்களில் ஆள் நுழைய முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எந்த கழிப்பிடத்திலும் முறையான பராமரிப்பு இல்லை; தண்ணீர், மின் வசதி எதுவும் இல்லை. பஸ் ஸ்டாண்ட் பொதுக் கழிப்பிடங்கள், வார்டுகளில் உள்ள பொதுக்கழிப் பிடங்களில் சுகாதாரத்தை மேம்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது.

பொதுக் கழிப்பிடங்களை துப்புரவு மேற்பார்வையாளர்கள் கண்காணித்து, அதிகாரிகளுக்கு தெரிவித்து, அதன்பின் நடவடிக்கை எடுக்கும் போது காலதாமதம் ஏற்படுகிறது.

இதனால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பொதுக்கழிப்பிடங்களில் நிலவும் குறைபாடுகளை உடனுடன் அதிகாரிகளுக்கு தெரிவிக்க "ஸ்மார்ட் போன்' தொழில்நுட்பம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளில் பணியாற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்களுக்கு
"ஸ்மார்ட் போன்' வழங்கப்பட்டது.

மேயர் பேசுகையில், "பொதுக்கழிப்பிடத்தில் தண்ணீர் வினியோகம், சுகாதாரம், மின் சப்ளை, கழிவறைகள் மற்றும் குப்பை தொட்டிகள் தொடர்பாக, ஏற்கனவே திட்டமிட்ட இரு கேள்விகள் ஸ்மார்ட் போனில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பொதுக்கழிப்பிடத்தை ஆய்வு செய்ததும், பதிலை பதிவு செய்ய வேண்டும். தினமும் இருவேளை கழிப்பிடங்களை பராமரிக்க வேண்டும். ஸ்மார்ட் போன் தகவல்கள் மாநகராட்சி அலுவலகத்தில் கம்ப்யூட்டரில் பெறப்படும். இத்தகவலின் அடிப்படையில் பொதுக்கழிப்பிடங்களில் உடனடியாக தூய்மைப்பணி மேற்கொள்ள, உரிய அலுவலர்களுக்கு தகவல் அனுப்பப்படும்' என்றார்.

கமிஷனர் லதா பேசுகையில், "கோவை மாநகராட்சியில் 275 பொதுக்கழிப்பிடங்கள் பராமரிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு துப்புரவு பணியாளர்களும், துப்புரவு மேற்பார்வையாளர்களும் ஐந்து பொதுக்கழிப் பிடங்களை கண்காணிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது' என்றார்.

நிகழ்ச்சியில், துணை கமிஷனர் சிவராசு, துணை மேயர், மண்டல தலைவர்கள், நிலைக்குழுத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.