திருப்பூர் மாநகராட்சியில் "பயோமெட்ரிக்' வருகை பதிவு முறை

Thursday, 01 August 2013 07:33 administrator நாளிதழ்௧ள் - மின் ஆளுமை
Print

தினமலர்              01.08.2013

திருப்பூர் மாநகராட்சியில் "பயோமெட்ரிக்' வருகை பதிவு முறை

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி அலுவலர்களின் வருகை பதிவுகளை, கம்ப்யூட்டர் மூலமாக கண்காணிக்கும் வகையில், "பயோமெட்ரிக்' வருகை பதிவு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் மற்றும் நான்கு மண்டல அலுவலகங்கள், சுகாதார பிரிவு, பொறியியல் பிரிவுகளில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றுகின்றனர். துப்புரவு பணியாளர்கள் உட்பட அனைவருக்கும், வருகை பதிவேடு, நோட்டு புத்தகங்களில் பராமரிக்கப்படுகிறது.

முறைகேடுகளை தவிர்க்கவும், பணியாளர்களை கண்காணிக்க ஏதுவாகவும், "பயோமெட்ரிக்' வருகை பதிவு தொழில்நுட்பத்தை அமலாக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்று, திருப்பூர் மாநகராட்சியில், இன்று (1ம் தேதி) முதல் "பயோமெட்ரிக்' வருகை பதிவு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது.

கமிஷனர் செல்வராஜ் கூறியதாவது:

திருப்பூர் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு,"பயோமெட்ரிக்' வருகை பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, மாநகராட்சி அலுவலகத்தில், அலுவலர்களுக்கு மட்டும் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது. அடுத்ததாக, மண்டல அலுவலர்களுக்கும், சுகாதார பிரிவுக்கும் விரிவுபடுத்தப்படும்.

கைவிரல் ரேகையை பதிவு செய்வதுடன், ஒவ்வொருவரின் முகத்தையும் அங்குள்ள கேமரா முன்பாக காட்ட வேண்டும். இத்திட்டம், ஒரு மாதம் சோதனை அடிப்படையில் செயலாக்கப்படும். அதன்பின், கம்ப்யூட்டர் மூலமாக கண்காணிக்கும், "பயோமெட்ரிக்' வருகை பதிவு முறை நடைமுறைப்படுத்தப்படும், என்றார்.