கட்டிட வரைபட ஒப்புதல் வழங்கும் திட்டம் மேயர் தொடங்கி வைத்தார்

Saturday, 03 August 2013 06:26 administrator நாளிதழ்௧ள் - மின் ஆளுமை
Print

தினத்தந்தி              03.08.2013

கட்டிட வரைபட ஒப்புதல் வழங்கும் திட்டம் மேயர் தொடங்கி வைத்தார்

சென்னை மாநகராட்சியில் 7 நாட்களுக்குள் கட்டிடம் கட்டுவதற்கான திட்ட அனுமதி அளிக்கும் வகையில், பசுமை வழி முறையில் கட்டிட வரைபட ஒப்புதல் வழங்கும் முறையை மேயர் சைதை துரைசாமி நே தொடங்கி வைத்தார்.

ஆன்–லைன் முறை

முன்பெல்லாம் சென்னை மாநகராட்சியில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களுக்கு மாநகர அதிகாரிகள் நேரில் சென்று கள ஆய்வு செய்த பின்னர் நேரடியாக மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களில் அதிகாரிகளால் ஒப்புதல் வழங்கப்பட்டு வந்தது. இந்த முறையில் அதிக காலதாமதம் ஏற்பட்டதுடன் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

எனவே இந்த முறையை மாற்றி, சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி கடந்த ஜூலை 1–ந்தேதி ஆன்–லைன் மூலம் விண்ணப்பிக்கும் புதிய முறையை தொடங்கி வைத்தார். இதன் மூலம் ஒரு மாத காலத்திற்குள் வரைபட ஒப்புதல் வழங்கப்பட்டு வந்தது.

பசுமை வழிமுறை

இந்நிலையில் ஒப்புதல் வழங்கும் காலத்தை மேலும் குறைக்கும் வகையில் பசுமை வழி முறையில் கட்டிட வரைபட ஒப்புதல் வழங்கும் முறையை மேயர் சைதை துரைசாமி நேற்று ரிப்பன் கட்டிடத்தில் தொடங்கி வைத்தார். இம்முறையில் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் 7 நாட்களுக்குள் கள ஆய்வு செய்யாமல் ஒப்புதல் வழங்கப்படும்.

கடலோர ஒழுங்குமுறை மண்டலம், நிலத்தடி நீர்பிடிப்பு பகுதி, ரெயில்வே எல்லையில் இருந்து 30 மீட்டருக்குள்ளோ, மெட்ரோ ரெயில் பாதையில் இருந்து 50 மீட்டருக்குள்ளோ இருக்கும் மனைகளுக்கு இம்முறையில் விண்ணப்பிக்க இயலாது. மேலும் இரண்டாம் முழுமைத்திட்டத்தின்படி சாலையினை விரிவாக்கம் செய்யப்பட வேண்டி நிலம் அளிக்க வேண்டி இருந்தால், இம்முறையில் விண்ணப்பிக்க இயலாது.

மக்களிடையே வரவேற்பு

பசுமை வழி முறையில் விண்ணப்பிக்கப்படும் மனை காலியாகவோ அல்லது தகர்ப்பு ஒப்புதல் வழங்கிய பிறகு காலி மனையாகவோ இருக்க வேண்டும். மனை அமைந்துள்ள பகுதி அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் அல்லது மனை உட்பிரிவில் இருக்க வேண்டும். இந்த புதிய திட்டம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.