வேலூர், தி.மலை மாவட்டத்தில் 25 பேரூராட்சிகளில் கணினி வரி வசூல் மையம் நவம்பருக்குள் திறக்க நடவடிக்கை

Thursday, 08 August 2013 08:27 administrator நாளிதழ்௧ள் - மின் ஆளுமை
Print

தினகரன்            08.08.2013

வேலூர், தி.மலை மாவட்டத்தில் 25 பேரூராட்சிகளில் கணினி வரி வசூல் மையம் நவம்பருக்குள் திறக்க நடவடிக்கை

வேலூர்: வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 25 பேரூராட்சிகளில் கணினி வரிவசூல் மையம் வரும் நவம்பர் மாதத்துக்குள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 வேலூர் மாவட்டத்தில் காவேரிப்பாக்கம், பனப்பாக்கம், நெமிலி, தக்கோலம், சோளிங்கர், விளாப்பாக்கம், திமிரி, கலவை, திருவலம், அம்மூர், பென்னாத்தூர், பள்ளிகொண்டா, ஒடுகத்தூர், ஆலங்காயம், உதயேந்திரம், நாட்றம்பள்ளி உள்ளிட்ட 16 பேரூராட்சிகள் உள்ளன.

 திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர், செங்கம், புதுப்பாளையம், கண்ணமங்கலம், களம்பூர், தேசூர், பெரணமல்லூர், சேத்துப்பட்டு, கீழ்பென்னாத்தூர், வேட்டவலம் உள்ளிட்ட 10 பேரூராட்சிகள் உள்ளன.

மொத்தமுள்ள 26 பேரூராட்சிகளில் சொத்து வரி, குடிநீர் வரி, பேரூராட்சிக்கு சொந்தமான வாடகை கட்டிட வரி உள்ளிட்டவை நிதி ஆண்டின் இறுதியில் மொத்தமாக வசூல் செய்து முடிக்கப்படும். இவ்வாறு முடிக்கப்படும் வரி வருவாய் குறித்த விவரங்களை பேரூராட்சி பதிவேட்டில் பராமரிப்பதில் சிரமங்கள் மற்றும் தவறுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இதை தவிர்ப்பதற்காக அனைத்து பேரூராட்சிகளிலும் கணினி வரிவசூல் மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் மற்றும் வேலூர் மாவட்டத்தில் உதயேந்திரம் பேரூராட்சியில் கணினி வரி வசூல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில், செங்கம் பேரூராட்சியில் குடிநீர் இணைப்பு வரி மட்டும் இந்த மையத்தில் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்ற வரிகள் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, வேலூர் மாவட்டத்தில் உதயேந்திரம் பேரூராட்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய கணினி வரி வசூல் மையம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 24 பேரூராட்சிகளில் விரைவில் கணினி வரி வசூல் மையம் திறப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கான ஆவணங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி நடந்துவருகிறது.

இதுகுறித்து, வேலூர், திருவண்ணாமலை மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மலையமான் திருமுடிக்காரி கூறுகையில், Ôஅனைத்து பேரூராட்சிகளில் நவீன கணினி வரி வசூல் மையம் வரும் நவம்பர் மாதத்துக்குள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடந்துவருகிறது. ஒவ்வொரு பேரூராட்சியிலும் ஒரு கணினி வரி வசூல் மையம் செயல்படும். இங்கு, பயிற்சி பெற்ற ஊழியர் ஒருவர் நியமிக்கப்படுவார்Õ என தெரிவித்தார்.

தமிழகத்தில் மொத்தம் 529 பேரூராட்சிகள் உள்ளன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 81 லட்சத்து 11 ஆயிரத்து 258 பேர் வசிக்கின்றனர். இது தமிழக மக்கள் தொகையில் 11.24 சதவீதம்.