ரூ.4 கோடியில் அடுக்குமாடி இரு சக்கர வாகன நிறுத்தம்

Monday, 20 August 2012 07:16 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற போக்குவரத்து
Print

தினமலர்             20.08.2012

ரூ.4 கோடியில் அடுக்குமாடி இரு சக்கர வாகன நிறுத்தம்

சென்னை:சென்னையில் முதல் முறையாக, நெருக்கடி நிறைந்த பாரிமுனை என்.எஸ்.சி., போஸ் சாலையில், நான்கு கோடி ரூபாயில், அடுக்கு மாடி, இரு சக்கரவாகன நிறுத்தத்தை மாநகராட்சி அமைக்கிறது.சென்னை பாரிமுனை எப்போதும் பரபரப்புடன் காணப்படும் பகுதி. இங்கு வர்த்தக மையங்கள், மொத்த நிறுவனங்கள், நகைக்கடைகள், கிடங்குகள் நிறைந்துள்ளதோடு, ஐகோர்ட்டும் உள்ளதால், தினமும் பல ஆயிரம் பேர் இங்கு வந்து செல்கின்றனர். இந்த பகுதியில், இருசக்கர வாகனங்களைக் கூட நிறுத்த வழியில்லை. இதனால், போக்குவரத்து நெரிசல் பிரச்னை அதிகமாக உள்ளது.9,000 சதுர அடியில்...இதைக் கருத்தில் கொண்டு, பாரிமுனை என்.எஸ்.சி., போஸ் சாலையில், அடுக்குமாடி இரு சக்கர வாகன நிறுத்த மையம் அமைக்கப்படும் என மாநகராட்சி அறிவித்தது. பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த அறிவிப்பை, மாநகராட்சி தற்போது துரிதப்படுத்தியுள்ளது."டுபிசல்' நிறுவன உதவியோடு, ஆலோசனை நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, இதற்கான வரைவுத் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தரைத்தளம் மற்றும் நான்கு அடுக்கு மாடிகளுடன், மொத்தம், 9,000 சதுர அடியில், வாகன நிறுத்த மையம் அமைக்கப்பட உள்ளது. 800 முதல் ஆயிரம் இருசக்கர வாகனங்களை இந்த மையத்தில் நிறுத்த முடியும்.இதில், தளங்களை இணைக்கும் தாய் தள வசதி, கண்காணிப்பு கேமரா, தீ விபத்து பாதுகாப்பு கட்டமைப்பு, சூரிய சக்தி விளக்கு ஆகிய வசதிகள் அமைகின்றன. இதற்கு, 4.06 கோடி ரூபாய் செலவாகும் என திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கூறும்போது, ""இந்த திட்டத்திற்கு விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் துவங்கும். இதுபோன்று, தி.நகர் பனகல் மாளிகை அருகே, பாஷ்யம் சாலையில், அடுக்குமாடி கார் நிறுத்த மையம் அமைக்கவும், திட்ட வரைவு தயாராகி வருகிறது. விரைவில் அந்தப் பணிகளும் துவங்கும்,'' என்றார்.இதுதவிர, சென்னையில், கார் நிறுத்த மையம் அமைக்க வாய்ப்புள்ள இடங்களைக் கண்டறிந்து, வடிவமைத்தல், கட்டுதல், பராமரித்தல், ஒப்படைக்கும் முறையில், பணிகளை மேற்கொள்ள உலகளாவிய அளவில், ஆர்வம் காட்டும் நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் நிலவும் நெருக்கடி நிலைக்கு, இத்தகைய முயற்சிகள் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Last Updated on Monday, 20 August 2012 07:17