அவினாசி புதிய பஸ் நிலையம் சீரமைப்பு பணி தீவிரம்

Thursday, 23 August 2012 10:07 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற போக்குவரத்து
Print

தினகரன்      23.08.2012

அவினாசி புதிய பஸ் நிலையம் சீரமைப்பு பணி தீவிரம்

அனுப்பர்பாளையம்,;  அவினாசி புதிய பஸ் நிலைய சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடக்கின்றன.


அவினாசி நகரம் தேசிய நெடுஞ்சாலை 47-ல் அமைந்துள்ளது. அவினாசியின் வழியாக தினசரி  3000-க்கும் மேற்பட்ட பஸ்கள், 4 சக்கர வாகனங்கள் கோவை, திருப்பூர், ஈரோடு, சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் உள்ள மைசூர், பெங்களூர், பாலக்காடு போன்ற நகரங்களுக்கும் சென்று வருகின்றன. இவை போக, டவுன் பஸ்கள் மற்றும் மினி பஸ்களும் அதிகளவில் உள்ளன. மேலும் பனியன் தொழிலாளர்களின் இரு சக்கர வாகனங்களும் ஆயிரக்கணக்கில்  சென்று வருகின்றன.

அவினாசி கைகாட்டிபுதூரில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டு இருந்தும்,   அந்த புதிய பஸ்நிலையதிற்குள் வர பஸ் ஓட்டுனர்கள் மிரளுகின்ற அளவிற்கு  இங்கு 6 வருடங்களாக குண்டும் குழியுமாகவே இருந்தது.

அவினாசி புதிய பஸ் நிலையத்தை சீரமைக்க, பொதுமக்கள் பல ஆண்டு காலமாக கோரி வந்தனர். இதையடுத்து, ஒருங்கினைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ், அவினாசி புதிய பஸ் நிலையத்தை சீரமைப்பதற்காக ரு. 1.20 கோடி செலவில் நிதி ஒதுக்கப்பட்டு,  கடந்த பிப்ரவரி மாதம்   தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

கடந்த ஏழு மாதகாலமாக புதிய பஸ் நிலைய ஓடுதள சீரமைப்புப்பணிகள் மிகவும் மெதுவாக நடந்து வந்தன. இதனால் பொது மக்கள் புழுதியிலும்,சாலை ஓரத்திலும் அங்கும் இங்கும் ஓடி நிற்கின்றனர். ஏழு மாதமாக வெளியூர் பஸ்கள் பஸ் நிலையத்துக்குள் வந்து செல்ல முடிவதில்லை இதனால் எந்த பஸ் எங்கு நின்று செல்கிறது என்று தெரியாமல் பொது மக்கள் குழப்பம் அடைந்து வந்தனர். எனவே,ரூ ரு. 1.20 கோடி செலவில் நடைபெறும் அவினாசி புதிய பஸ் நிலைய ஓடுதள சீரமைப்புப்பணிகளை விரைவு படுத்த வேண்டும் என பொது மக்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தனர்.

சமீபத்தில் கடந்த வாரம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் மதிவாணன் அவினாசி புதிய பஸ் நிலையப்பணிகளை நேரில் பார்த்து ஆய்வு செய்து, புதிய பஸ் நிலைய ஓடுதள சீரமைப்புப் பணிகளை விரைவு படுத்த உத்தரவிட்டார்.  இதனையடுத்து, அவினாசி புதிய பஸ் நிலைய   ஓடுதளத்தில் கான்கிரீட்  அமைக்கும் பணிகளை ஏழு மாதங்களுக்கு பிறகு மிக வேகமாக  செய்து வருகின்றனர்.