நாகர்கோவிலில் பஸ் நிறுத்தங்களில் ஒரே மாதிரியான ஸ்டீல் நிழற்குடைகள்

Thursday, 21 February 2013 12:20 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற போக்குவரத்து
Print
தின மணி             20.02.2013

நாகர்கோவிலில் பஸ் நிறுத்தங்களில் ஒரே மாதிரியான ஸ்டீல் நிழற்குடைகள்


நாகர்கோவில் நகரப் பகுதியை அழகுபடுத்தும் வகையில் அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் ஒரே மாதிரியான அமைப்பில் ஸ்டீல் நிழற்குடைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் தெரிவித்துள்ளார்.

இத்திட்டம் குறித்து ஆட்சியர் கூறியதாவது:

நாகர்கோவில் நகரின் அனைத்துப் பகுதிகளையும் அழகுபடுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, நகரப் பகுதியில் உள்ள அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் உள்ள நிழற்குடைகளை ஒரே மாதிரியான அமைப்பில் ஸ்டீல் நிழற்குடைகளாக மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் நகராட்சி 52 வார்டு பகுதியில் பேருந்துகள் செல்லும் சாலைகளில் 158 பேருந்து நிறுத்துமிடங்களில், 60 பேருந்து நிறுத்துமிடங்களில் மேற்கூரையுள்ளன.

98 பேருந்து நிறுத்துமிடங்களில் மேற்கூரையில்லாமல் பழுதடைந்த நிலையில் உள்ளன. 158 பேருந்து நிறுத்துமிடங்களையும் ஒரே மாதிரியான வடிவமைப்பில் இருக்கைகள், மேற்கூரைகள், வண்ணங்கள் கொண்ட வகையில் பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நிழற்குடைகளை அமைக்கும் பணியை விளம்பர நிறுவனங்கள் மேற்கொண்டு, பராமரிப்பு செய்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

விளம்பரங்கள் ஆண்டு ஒன்றுக்கு நகராட்சியால் நிர்ணயிக்கப்பட்ட விளம்பர கட்டணத்தின் அடிப்படையில் வசூலிக்க அனுமதி வழங்கப்படும். அரசியல், சமுதாயம் மற்றும் மதம் ரீதியான விளம்பரங்கள் செய்யக்கூடாது.

ஆபாசம் மற்றும் கேலி சித்திரங்கள் விளம்பரங்கள் கூடாது. வியாபார நோக்கமுள்ள விளம்பரங்கள் மட்டும் செய்யப்பட வேண்டும். அமைக்கப்படும் பயணிகள் நிழற்குடை பாதுகாப்பாகவும், வெயில், மழைக் காலங்களுக்கு ஏற்றதாகவும் அமைக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை நாகர்கோவில் நகராட்சி அலுவலர்கள் மேற்கொள்வர் என்றார்.
Last Updated on Thursday, 21 February 2013 12:22