சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் புதிய பஸ் நிலையம்

Wednesday, 19 June 2013 06:50 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற போக்குவரத்து
Print

தினமணி               19.06.2013

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் புதிய பஸ் நிலையம்

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் புதிய பஸ் நிலையத்துக்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காஞ்சிபுரம் நகர்மன்றத்தின் அவசரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது. நகர்மன்றத் தலைவர் மைதிலி திருநாவுக்கரசு தலைமை வகித்தார். ஆணையர் விமலா, தலைமைப் பொறியாளர் சுப்புராஜ், துணைத்தலைவர் ஆர்.டி. சேகர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம்:

    காஞ்சிபுரம் நகராட்சி 51 வார்டுகளில் 2.33 லட்சம் மக்கள் தொகை உள்ளது. இந்நகரம் 36.14 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கோயில் நகரமாக உள்ளது. நகரின் மத்தியில் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டத் தலைநகரங்கள், ஆந்திரம், கர்நாடகம், புதுவை உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 700 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டம் தொழிற்சாலைகள் நிறைந்த தொழிற்பேட்டைகள் அதிகமாக உள்ளதாலும், சுற்றுலா நகரமாகவும், திருக்கோயில்கள் நிறைந்த புனித நகரமாகவும் விளங்குவதால் இங்குவந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இந்த பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து பஸ்களையும் இயக்குவதற்கு போதுமான இடவசதி இல்லை.

இந்நிலையில் காஞ்சிபுரம் நகரின் எதிர்கால தேவைக்கும் அதன் வளர்ச்சிக்கும் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் புதிய பஸ்நிலையம் அமைக்க வேண்டும் என்ற அவசியத்தின் பேரில் சித்தேரி கிராம எல்லைக்குள்பட்ட பகுதியில் உள்ள கொல்லா சிங்கண்ண செட்டியார் தர்மஸ்தாபன பரம்பரை தர்மகர்த்தா கொல்லா வெங்கிட கண்ணையா செட்டியாருக்கு உரிமைப்பட்ட காலியிடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இது சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகிலும், காஞ்சிபுரம் சுற்றுவட்ட புறவழிச் சாலைக்கு அருகிலும் உள்ளது. மேலும் இந்த சாலை 6 வழிச்சாலையாகத் தரம் உயர்த்தப்பட உள்ளது. எனவே இந்த இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பிவைக்க நகர்மன்றத் தலைவரின் சிறப்புத் தீர்மானமாக கொண்டு வரப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தீர்மானம் நகர்மன்றக் கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து நகர்மன்றத் தலைவர் மைதிலி திருநாவுக்கரசு செய்தியாளர்களிடம் கூறியது: சித்தேரி மேடு கிராம எல்லைக்குள்ளப்பட்ட பகுதியில் குறிப்பிட்ட தனியார் டிரஸ்டுக்கு சொந்தமான இடங்கள் அதிக அளவில் உள்ளன. அதில் 50 ஏக்கர் மட்டும் காஞ்சிபுரம் பஸ் நிலையத்துக்கு தேர்வு செய்ய தீர்மானித்துள்ளோம். ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ. 2 ஆயிரம் என்ற கணக்கில் 99 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளோம். அரசு இதற்கான ஆணையை பிறப்பித்தால், பஸ் நிலையம் அமைப்பதற்கான பணி விரைவில் தொடங்கும் என்றார் அவர்.