காங்கயம், வெள்ளக்கோவிலுக்கு ரூ.91 கோடியில் குடிநீர் திட்டம்

Tuesday, 11 February 2014 10:45 administrator நாளிதழ்௧ள் - குடீநீர் வழங்௧ல்
Print

தினமலர்              11.02.2014

காங்கயம், வெள்ளக்கோவிலுக்கு ரூ.91 கோடியில் குடிநீர் திட்டம்

காங்கயம் : காங்கயம், வெள்ளக்கோவில் நகராட்சிகள் மற்றும் 528 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில், 91.4 கோடி ரூபாய் செலவில், புதிய கூட்டு குடிநீர் திட்டத்துக்கான பணிகள் துவங்கியுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம், வெள்ளக்கோவில் ஏரியா கடும் வறட்சி பகுதிகளான உள்ளன. நிரந்தர நீராதாரம் இல்லாமல், நிலத்தடி நீர் மற்றும் சிறிய குடிநீர் திட்டங்கள் மட்டுமே உள்ளன.

இதனால், இப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது; கோடை காலத்தில் மிக பெரிய பிரச்னையாக மாறி வருகிறது.இதற்கு தீர்வு காணும் வகையில், காங்கயம், வெள்ளக்கோவில் நகராட்சிகள், ஒன்றியங்கள் மற்றும் மூலனூர் ஒன்றிய கிராமங்கள், ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை ஒன்றிய பகுதிகளில் உள்ள 528 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில், புதிய கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த, தமிழக அரசு 91.4 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தினமும் 25 எம்.எல்.டி., தண்ணீர் எடுக்கும் வகையில், நீர் உறிஞ்சு நிலையம் அமைக்கப்பட உள்ளது.

16 கி.மீ., தூரம் தண்ணீர் கொண்டு வந்து, இச்சிபாளையத்தில் சுத்திகரிப்பு செய்யப்படும். மேட்டுக்கடை, வாலிகாடு பகுதியில் நீருந்து நிலையமும், 54 கி.மீ., தூரம், பெரிய அளவிலான பிரதான குழாய்கள், 500 கி.மீ., தூரம் பகிர்மான குழாய் அமைக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது.

இப்பகுதிகளில் உள்ள மூன்று லட்சம் மக்களுக்கு, தினமும் 135 லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில், புதிய திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்ட பணிகளை 14 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், காங்கயம், குண்டடம், தாராபுரம் ஒன்றிய கிராமங்கள், நகராட்சிகள், சென்னிமலை ஒன்றியத்தில் உள்ள 1,262 குடியிருப்புகள் பயன்பெறும் வகையில், மேலும் 90 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. திட்ட வடிவமைப்பு, டெண்டர் பணி முடிந்து, இன்னும் சில மாதங்களில் இப்பணியும் துவங்கும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.