முறைகேடான 1,732 குடிநீர் இணைப்புகள்...துண்டிப்பு!மாவட்டத்தில் 173 மோட்டார்கள் பறிமுதல்

Wednesday, 19 April 2017 09:50 administrator நாளிதழ்௧ள் - குடீநீர் வழங்௧ல்
Print

தினமலர்        19.04.2017

முறைகேடான 1,732 குடிநீர் இணைப்புகள்...துண்டிப்பு!மாவட்டத்தில் 173 மோட்டார்கள் பறிமுதல்

காஞ்சிபுரம்;காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளில், முறைகேடாக பயன்படுத்தி வந்த 1,732 குடிநீர் இணைப்புகளை உள்ளாட்சி அதிகாரிகள் துண்டித்துள்ளனர். மேலும், 173 மின் மோட்டார்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்க, அதன் எதிரொலியாக, குடிநீர் பிரச்னையும் அதிகரித்து வருகிறது.

நிலத்தடி நீர்மட்டம், 2015ல் பெய்த பெருமழைக்கு பின் ஓரளவு கட்டுக்குள் இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு, வட கிழக்கு பருவ மழை பொய்த்த பின், குடிநீர் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது என, நீராதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், செய்யாறு, பாலாறு, வேகவதி ஆறு, ஓங்கூர் ஆறு மற்றும் 912 ஏரிகள், நுாற்றுக்கணக்கான குளங்கள் என, மாவட்டம் முழுவதும் ஏராளமான நீர்நிலைகள் இருந்த போதும், குடிநீர் பிரச்னை தீராமல் உள்ளது.

குடிநீர் திருட்டு

குடிநீர் பிரச்னைக்கு மற்றொரு காரணமாக, முறைகேடான குடிநீர் இணைப்புகள், ஊராட்சிகளிலும், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் முளைத்து வருகின்றன. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்களில், திருட்டுத்தன மாக குழாய் அமைத்து மோட்டார் மூலம் குடிநீர் திருடப்படுகிறது.சில இடங்களில் வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுமே இந்த முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார் உள்ளது. அவற்றை முறையாக கண்காணித்து உடனடியாக அந்த குடிநீர் இணைப்புகளை துண்டிக்க சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கூட்டத்தில் உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி, ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சிகளில் முறைகேடான குடிநீர் இணைப்புகளை கண்டறிதல், மோட்டார்களை பறிமுதல் செய்தல் போன்ற நடவடிக்கைகளில் அரசு அலுவலர்கள் ஈடுபட்டு வந்தனர்.கோடைகாலம் துவங்கியது முதல் முறைகேடான இணைப்புகள் குறித்து, மாவட்ட ஆட்சியர், பொன்னையாவிடம் நேற்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ஊராட்சி ஒன்றியங்களில் 2,036 முறைகேடான இணைப்புகள் கண்டறியப்பட்டிருப்பதாகவும், அதில், 1,627 இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, 41 மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதே போல், நகராட்சிகளில், 23 முறைகேடான இணைப்புகள் துண்டிக்கப் பட்டு, 109 மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நடவடிக்கை

பேரூராட்சிகளில், 82 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, 23 மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முறையாக வரி செலுத்தாமல், உள்ளாட்சி அமைப்புகள் வழங்கும் குடிநீரை, முறைகேடாக உறிஞ்சும் நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை பாய வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. முறைகேடான குடிநீர் இணைப்புகள் அனைத்தும் விரைவில் துண்டிக்கப்படும் என, உள்ளாட்சி அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.