பணி ஆணை வழங்கப்பட்டது அதங்கோடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் விரைவில் துவக்கம் 14 மாதங்களில் முடிக்க திட்டம்

Wednesday, 22 September 2010 10:48 administrator நாளிதழ்௧ள் - நீர் சுத்தி௧ரிப்பு
Print

தினகரன் 22.09.2010

பணி ஆணை வழங்கப்பட்டது அதங்கோடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் விரைவில் துவக்கம் 14 மாதங்களில் முடிக்க திட்டம்

நாகர்கோவில், செப்.22: அதங்கோட்டில் ரூ16.70 கோடியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. பணிகளை 14 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குமரி&கேரள எல்லையை ஒட்டியுள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. களியக்காவிளை பேரூராட்சி, மெதுகும்மல், வாவறை, மங்காடு, குளப்புறம், அடைக்காக்குழி ஊராட்சிகள் பயன்பெறும் வகையில் களியக்காவிளை & மெதுகும்மல் கூட்டு குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டது. இதுபோன்று கொல்லங்கோடு & ஏழுதேசம் பேரூராட்சிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதி ஊராட்சிகளின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கொல்லங்கோடு & ஏழுதேசம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இந்த திட்டங்களுக்கு அதங்கோடு அருகே தாமிரபரணி ஆற்றுப்படுகையில் உறைகிணறுகள் அமைக்கப்பட்டு அதில் இருந்து நீர்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

களியக்காவிளை பேரூ ராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க களியக்காவிளை &மெதுகும்மல் கூட்டு குடிநீர் திட்டம், கொல்லங்கோடு & ஏழுதேசம் 27 வழியோர கிராமங்கள் மற்றும் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 79 வழி யோர கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக அதங்கோட்டில் நிலம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. கடந்த டிசம்பரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ16.70 கோடியில் அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய நகர திட்ட கோட்ட நிர்வாக பொறியாளர் கூறியிருப்பதாவது:

குமரி மாவட்டத்தில் பயன்பாட்டில் உள்ள களியக்காவிளை பேரூராட்சி, மெதுகும்மல் ஊராட்சி, 22 வழியோர குடியிருப்புகளுக் கான கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் கொல்லங்கோடு பேரூராட்சி, ஏழுதேசம் பேரூராட்சி, 27 வழியோர குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவற்றுக்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டம் செயல்படுத்தப்பட்டது. அத்துடன் மேல் புறம் ஒன்றியத்தில் உள்ள 79 குடியிருப்புகளுக்கான திட்டத்திற்கும் என்று மொத்தம் 1 லட்சத்து 86 ஆயிரத்து 347 பேர் பயன்பெறும் வகையில் நகராட்சி நிர்வாகத்தால் அரசாணை வெளியிடப்பட்டது. ஒப்பந்த புள்ளிகள் முடிவு செய்யப்பட்ட நிலையில் மதுரை தென் மண்டல பொறியாளரால் பணி ஆணை 17.9.2010 அன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் தொடங்கப்பட்டு வரும் 2011ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.