கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் 10 கோடி லிட்டர் சப்ளை!

Thursday, 23 September 2010 05:39 administrator நாளிதழ்௧ள் - நீர் சுத்தி௧ரிப்பு
Print

தினமலர் 23.09.2010

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் 10 கோடி லிட்டர் சப்ளை!

சென்னை ""மீஞ்சூரிலிருந்து கடல் நீரை குடி நீராக்கும் திட்டம் மூலம் 10 கோடிலிட்டர் குடிநீர் சென்னைக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. நெமிலியில் நிறுவப்பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் அடுத்த ஆண்டு டிசம்பரில் முடிவடையும்,'' என, சென்னைக் குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனர் சிவதாஸ் மீனா கூறினார்.சென்னை மக்களின் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு, மீஞ்சூரில் 600 கோடி ரூபாய் செலவில், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கடல்நீர் எதிர்மறை சவ்வூடு பரவல் முறையில், உப்பு முற்றிலும் அகற்றப்பட்டு, குடிநீராக மாற்றப்படுகிறது.தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பத்திரிகையாளர்களுக்கு விளக்கும் வகையில், செயல்விளக்கத்திற்கு, சென்னைக் குடிநீர் வாரியம் ஏற்பாடு செய்தது. நிறுவனத்தின் சுத்திகரிப்பு முறை குறித்து வாரிய அதிகாரிகள் நிருபர்களுக்கு விளக்கம் அளித்தனர்.பின், சென்னைக் குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனர் சிவதாஸ் மீனா கூறியதாவது:மீஞ்சூரில் துவக்கப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் தினமும் பத்து கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கிறது. இதில், 1.5 கோடி லிட்டர் மணலி நீரேற்று நிலைத்திற்கு அனுப்பப்பட்டு, திருவொற்றியூர், கத்திவாக்கம் நகராட்சி பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.மாதவரம் நீரேற்று நிலையத்திற்கு 3.5 கோடி லிட்டர் குடிநீர் அனுப்பப்பட்டு, மாதவரம் மற்றும் வடசென்னை பகுதிகளுக்கும், மீதமுள்ள ஐந்து கோடி லிட்டர் குடிநீர், செங்குன்றம் நீரேற்று நிலையம் மூலம் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.செங்குன்றம் ஏரி மூலம் 26 கோடி லிட்டர், வீராணம் ஏரியிலிருந்து 18 கோடி லிட்டர், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 12 கோடி லிட்டர், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் 10 கோடி என மொத்தம் 66 கோடி லிட்டர் குடிநீர் தினமும் சென்னைக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.நெமிலியில் 871 கோடி ரூபாய் செலவில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.

இந்த பணிகள் 2011 டிசம்பர் மாதம் நிறைவடையும். அதன் மூலம் தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும் என்பதால் சென்னை மக்களின் குடிநீர் தேவை பெருமளவு நிறைவேறும்.வடசென்னையில் புளியந்தோப்பு, அயனாவரம் பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் வருவதாக புகார்கள் வந்தன. அந்த பகுதிகளில் உடனடியாக குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டு, லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. 42 ஆயிரம் இணைப்புகள் கண்டறியப்பட்டு, அவற்றை மாற்றியமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

சென்னை தவிர ஆவடி, அம்பத்தூர், உள்ளகரம், புழுதிவாக்கம், மதுரவாயல், ஆலந்தூர் நகராட்சி பகுதிகளில் சென்னை குடிநீர் வாரியம் மூலம் குடிநீர் வழங்கும் திட்டமிடப்பட்டு, அதற்கான உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.இவ்வாறு சிவதாஸ் மீனா கூறினார்."மக்கள் ஒத்துழைக்க வேண்டும்'கழிவுநீர் பிரச்னை குறித்து சிவதாஸ் மீனா கூறியதாவது:பாதாள சாக்கடையில் அடைப்புகளை சரி செய்ய மனிதர்கள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கூடுதலாக 17 "டிசில்ட்' இயந்திரங்களும், 28 "ஜெட்ராடிங்' இயந்திரங்களும் வாங்கப்பட உள்ளன. இவற்றில் பாதிக்கும் மேலான இயந்திரங்கள் வந்துள்ளன. கழிவுநீர் அடைப்புகள் சரி செய்யும் பணி முடுக்கி விடப்படும்.பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கழிவுநீர் அடைப்பு ஏற்படும் காரணங்கள், பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை குறித்து, செப்.,28 முதல் பகுதி வாரியாக விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.இவ்வாறு சிவதாஸ் மீனா கூறினார்.