கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் 90 மில்லியன் லிட்டர் தினமும் வினியோகம்

Thursday, 23 September 2010 09:54 administrator நாளிதழ்௧ள் - நீர் சுத்தி௧ரிப்பு
Print

தினகரன் 23.09.2010

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் 90 மில்லியன் லிட்டர் தினமும் வினியோகம்

சென்னை, செப்.23: மீஞ்சூர் காட்டுப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலைய செயல்பாடுகள் குறித்து, சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் சிவ்தாஸ் மீனா, சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

வறட்சிக் காலங்களிலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த திட்டப் பணிகள் முடிந்து ஜூலை 31ம் தேதி, முதல்வர் கருணாநிதி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இங்கு, ஒரு நாளைக்கு 90 மில்லியன் லிட்டர் கடல் நீர் குடிநீராக்கப்படுகிறது. திருவொற்றியூர், கத்திவாக்கம் நகராட்சிகள் மற்றும் அப்பகுதி தொழிற்சாலைகளுக்கு பகிர்ந்தளிக்க, மணலி கீழ்நிலை தொட்டிக்கு 15 மில்லியன் லிட்டர் குடிநீர் தரப்படுகிறது.

பட்டேல் நகர் பகிர்மான நிலையம் மற்றும் அப்பகுதி தொழிற்சாலைகளுக்கு மாதவரத்தில் உள்ள கீழ்நிலை தொட்டிக்கு 35 மில்லியன் லிட்டர் குடிநீர் கொடுக்கப்படுகிறது. மீதியுள்ள குடிநீர் வட மற்றும் மத்திய சென்னையின் சில பகுதிகளின் பகிர்மானத்துக்காக புழல் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்படுகிறது. இந்த திட்டம் எதிர்பார்த்த பலனை தந்துள்ளது.

வடசென்னையில் குடிநீர் இணைப்புகளில் கசிவு இருக்கும் 42 ஆயிரம் இடங்கள் கண்டறியப்பட்டது. இதை சரி செய்யும் பணி மழைக் காலம் தொடங்குவதால், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

டிசம்பருக்கு பிறகு மீண்டும் தொடங்கும். பிளாஸ்டிக் பை, குப்பை, விலங்கு கழிவுகளால் கழிவு நீர் குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து, 28ம் தேதி விழிப்புணர்வு பிரசாரத்தை மாநகராட்சியுடன் இணைந்து தொடங்குகிறோம் என்றார்.