சென்னையில் கழிவுநீர் சுத்திகரிப்புக்கு ரூ.300 கோடி

Friday, 27 July 2012 11:13 administrator நாளிதழ்௧ள் - நீர் சுத்தி௧ரிப்பு
Print

தினமணி               27.07.2012

சென்னையில் கழிவுநீர் சுத்திகரிப்புக்கு ரூ.300 கோடி


சென்னை, ஜூலை 26: சென்னையில் கழிவுநீர் சுத்திகரிப்புக்கு ரூ.300 கோடி செலவில் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதில், முதல் கட்டமாக ரூ.150 கோடி விடுவிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 மேலும், சிறப்பாகச் செயல்படும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு ரொக்கப் பரிசும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

 இதுகுறித்து, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

 சென்னை நகரைச் சுற்றி பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் வணிக அமைப்புகள் அதிகரித்து வருகின்றன. மக்கள் தொகை அதிகரித்து அதன் காரணமாக தனி வீடுகள் அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறி வருவதற்கேற்ப கழிவுநீர் அகற்றல் அமைப்பு அமைக்கப்பட வேண்டும். நீர் ஆதாரங்கள் மற்றும் நீர் வழிப் பாதைகளில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் கலக்கப்படுவது தவிர்க்கப்படுவது அவசியம்.

 அதன்படி, சென்னை நகரில் உள்ள நீர் வழிப் பாதைகளில் கழிவுநீர் கலக்கக் கூடிய கூவம் ஆற்றில் 105 இடங்கள், பக்கிங்காம் கால்வாயில் 183 இடங்கள், அடையாறு ஆற்றில் 49 இடங்கள் என மொத்தம் 337 இடங்களில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய ரூ.300 கோடி செலவில் திட்டங்களை நிறைவேற்ற முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

 இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக முதல் கட்டமாக ரூ.150 கோடியை தவணை முறையில் சென்னை பெருநகர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்துக்கு விடுவிக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

 அதன்படி, பிரதானக் கழிவுநீர் குழாய்கள் அமைத்தல், சிறிய அளவிலான குழாய்களை அகற்றி, அதிக விட்டம் கொண்ட கழிவு நீர் உந்து குழாய்கள் அமைத்தல், சாலையோரம் சிறிய கழிவுநீரேற்றும் நிலையங்கள் அமைத்தல், ஏற்கெனவே உள்ள கழிவுநீரேற்றும் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளுதல் மற்றும் சிறிய அளவிலான கழிவுநீர்க் குழாய்களை பெரிய குழாய்கள் கொண்டு மாற்றி அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் சென்னை நகரில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஆறுகளுடன் கலப்பது தடுத்து நிறுத்தப்படும்.

 உள்ளாட்சிகளுக்குப் பரிசு-பாராட்டு: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சேவை தரம் உயர, அவற்றுக்கிடையே ஆக்கப்பூர்வமான போட்டி அவசியம். சிறந்த சேவைகள் செய்யும் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு முதல்வர் விருது ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படும் எனவும், சிறந்த மாநகராட்சிக்கு ரூ.25 லட்சமும், சிறந்த முதல் மூன்று நகராட்சிகளுக்கு முறையே ரூ.15 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.5 லட்சமும், முதல் மூன்று பேரூராட்சிகளுக்கு முறையே ரூ.10 லட்சம், ரூ.5 லட்சம் மற்றும் ரூ.3 லட்சமும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

 இதனைச் செயல்படுத்தும் வகையில், சிறந்த மாநகராட்சி மற்றும் நகராட்சிகளைத் தேர்வு செய்ய உள்ளாட்சித் துறை அமைச்சரை தலைவராகவும், துறையின் செயலாளர், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர், நகர்மன்ற தலைவர்களின் பேரவைத் தலைவர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், நகராட்சி நிர்வாக இயக்குநரை உறுப்பினர்-செயலாளராகவும் கொண்ட ஓர் உயர்நிலைக் குழு அமைக்கப்படும்.

 இதற்கென ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.