சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க சிவகாசி மக்கள்... எதிர்பார்ப்பு தேவை நகராட்சி நிர்வாக நடவடிக்கை

Monday, 11 March 2013 11:54 administrator நாளிதழ்௧ள் - நீர் சுத்தி௧ரிப்பு
Print
தினமலர்          11.03.2013

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க சிவகாசி மக்கள்... எதிர்பார்ப்பு தேவை நகராட்சி நிர்வாக நடவடிக்கை


சிவகாசி: சிவகாசியில் "மினரல் வாட்டர் பிளான்ட்' அமைத்து, குறைந்த விலைக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை, நகராட்சியால் ஏற்படுத்த,பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.சிவகாசி நகராட்சியில் வாரம் இருமுறை, பகுதிவாரியாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. மானூர் கூட்டு குடிநீர்,வெம்பக்கோட்டை நீர் தேக்க திட்டங்கள் மூலம், தினம் 40 முதல் 50 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. நகராட்சியில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகித்தாலும், உடல் நலனின் அக்கரை கொண்ட 60 சதவீத மக்கள், சுத்திகரிக்கப்பட்ட நீரை குடிப்பதையே விரும்புகின்றனர். சிவகாசியில் தனியார் மினரல் வாட்டர் விற்பனையும் சூடு பிடிக்கிறது. தினம் 50க்கு மேற்பட்ட மினிடேங்கர் லாரிகள், டிராக்டர்கள் வீதி,வீதியாக வந்து, 18 லிட்டர் கொண்ட ஒரு குடம் நீரை 13க்கு விற்பனை செய்கின்றனர்.

பலர் கடைகளிலே பிளாஸ்டிக் டேங்க் வைத்து, லிட்டர் நீர் 70 காசுக்கு விற்கின்றனர். சுத்திரிகரித்து குடிநீர் விற்பனை செய்யும் பெரிய நிறுவனங்களிடம் 1000 லிட்டர் குடிநீரை 100க்கு வாங்கி, அதை வீதிவியாககொண்ட சென்று, 700 முதல் 800 ரூபாய் வரை விற்கின்றனர். முகூர்த்த நாட்களில் மண்டபங்களுக்கு சப்ளை செய்து கூடுதல் லாபம் பார்க்கின்றனர். இதில் ஈடுபடுவோர், வாகன பராமரிப்பு,டீசல் செலவு போக, தினம் 500 முதல் ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர்.

தற்போது கோடை துவங்கியதால், குடிநீர் வியாபாரமும் களை கட்டி உள்ளது.இச் சூழலில் சிலர்,முறையாக சுத்திகரிக்கப்படாத குடிநீரை கூட விற்று, லாபம் பார்க்கின்றனர். இதனால் மக்கள், பணம் கொடுத்தும் சுகாதாரமற்ற குடிநீரை பருகும் நிலையும் உள்ளது. இதை கருத்தில் கொண்டு,நகராட்சி மூலம் சுத்திகிரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, முயற்சி மேற்கொள்ள வேண்டும். சிறிய ஊராட்சிகளில் கூட மினரல் வாட்டர் பிளாண்ட் அமைத்து, வீடுகளுக்கு குடிநீர் வழங்குகின்றனர். இதே திட்டத்தை நகராட்சியிலும் அமல்படுத்த வேண்டும். ஆர்.ஓ., சிஸ்டம் மூலம் ஒரு மணிநேரத்திற்கு, 10 ஆயிரம் லிட்டர் குடிநீர் சுத்திகரித்து தரும் மெகா பிளாண்ட்டுகள் உள்ளன. நகராட்சி வாட்டர் டேங்கில் சுத்திகரிக்கும் பிளாண்ட் அமைத்து, காயின் பாக்ஸ் மாடலில் ஒரு குடம் குடிநீரை 5 விற்பனை செய்யலாம்.

மக்களே நேரிடையாக வந்து, சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பணம் கொடுத்து பெற்று செல்வார்கள். இத் திட்டத்தால் நகராட்சிக்கு தினம் பல ஆயிரம் வருமானமாக கிடைக்கும். மக்களுக்கும் முறையான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும்,குறைந்த விலைக்கு கிடைக்கும்.இதை செயல்படுத்த நகராட்சி முயற்சி மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.