மகளிர் சுய உதவிக்குழு மூலம் மாநகராட்சிகளில் "டாய் லைப்ரரி' பட்டியல் தயாரிக்கிறது அரசு

Tuesday, 14 December 2010 08:47 administrator நாளிதழ்௧ள் - ம௧ளிர் நலம் / மேம்பாடு
Print

தினமலர்              14.12.2010

மகளிர் சுய உதவிக்குழு மூலம் மாநகராட்சிகளில் "டாய் லைப்ரரி' பட்டியல் தயாரிக்கிறது அரசு

சேலம்: தமிழகத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் பெண்களுக்கு தையற் கலை பயிற்சி, அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு, புடவைகளுக்கு ஜரிகை பதித்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. தவிர, வங்கிகளுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தி தனிநபர் மற்றும் குழு கடன் கிடைக்கவும் வழிவகை செய்யப்படுகிறது. மகளிர் சுய உதவிக்குழு மூலம் கடன் பெற்றவர்கள் பண்டிகை கால ஸ்வீட் தயாரிப்பு, ஹோட்டல் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சொர்ண ஜெயந்தி திட்டத்தின் கீழ், சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு கம்ப்யூட்டர் ஹார்டு வேர் பயிற்சி, மொபைல் சர்வீஸ், ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி ஆகிய பயிற்சிகளை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் மாநகராட்சி பகுதிகளில் குழந்தைகளுக்கான, "டாய் லைப்ரரி'(பொம்மை நூலகம்) சிஸ்டத்தை செயல்படுத்துவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. சேலம், மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் விருப்பம் உள்ள சுய உதவிக்குழுவினர் பட்டியலை சேகரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

"டாய் லைப்ரரி'யில் குழந்தைகளின் அறிவு திறனை ஊக்கும்விக்கும் வகையிலான அனைத்து விளையாட்டு உபகரணங்களும் இடம்பெறும். டாய் லைப்ரரியில் மாநகராட்சி சார்பில் நிர்ணயம் செய்யப்படும் கட்டணத்தை செலுத்தி பெற்றோர்கள் உறுப்பினராகலாம். மூன்று வயதில் இருந்து 12 வயது வரையுள்ள குழந்தைகள் டாய் லைப்ரரியை பயன்படுத்தி கொள்ளலாம். டாய் லைப்ரரியை தொடர்ந்து மொபைல் லைப்ரரி சிஸ்டத்தையும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய மாநகராட்சி வாகனங்கள் மூலம் அரசு பள்ளிகளுக்கு நேரடியாக சென்று ஒரு வகுப்பறை நேரம்(45 நிமிடம்) மாணவர்களின் பயன்பாட்டுக்கு விடப்படும். குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களின் அறிவு திறனை மேம்பட செய்வதே இத்திட்டத்தின் நோக்கம். சேலம் மாநகராட்சியில் சூரமங்கலம் பகுதியிலும், இட்டேரி ரோடு பகுதியிலும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அம்மாப்பேட்டையை சேர்ந்த ஒரு சில சுய உதவிக்குழுக்கள் டாய் லைப்ரரியை பராமரிக்க விருப்பம் தெரிவித்துள்ளன. எனவே, விரைவில் சேலத்தில் டாய் லைப்ரரி சிஸ்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.