சென்னையில் 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனைகள் விரைவில் திறப்பு: மேயர் தகவல்

Tuesday, 14 December 2010 09:25 administrator நாளிதழ்௧ள் - ம௧ளிர் நலம் / மேம்பாடு
Print

தினமணி               14.12.2010

சென்னையில் 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனைகள் விரைவில் திறப்பு: மேயர் தகவல்

சென்னை, டிச.14: சென்னையில் கட்டப்பட்டுள்ள 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனைகளை துணை முதல்வர் மு..ஸ்டாலின் விரைவில் திறந்து வைப்பார் என மேயர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

புளியந்தோப்பில் கட்டப்பட்டு வரும் 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனையை பார்வையிட்ட பின்னர் அவர் கூறியதாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை மாநகராட்சி சார்பில் 10 மண்டலங்களிலும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதற்காக 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனைகள் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதில் அயனாவரத்தில் ஏற்கனவே யுனைடெட் இந்தியா நகர் முதல் பிரதான சாலையில் ரூ. ஒரு கோடியே 34 லட்சம் செலவில் 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புளியந்தோப்பில் ரூ. 4 கோடியே 10 லட்சம் செலவில் 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனை கட்டடப் பணிகள் கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது. இதில் தரைத் தளம் மற்றும் முதல் தளத்தில் 40 படுக்கைகளுடன் கூடிய அறுவைச் சிகிச்சை மையம், சுகப் பிரசவ மையத்துடன் கூடிய மருத்துவமனை, மின் தூக்கி, சாய்தளம், அறுவைச் சிகிச்சை அரங்குகள், கழிப்பறைகள், புற நோயாளிகள் பிரிவு ஆகிய வசதிகளுடன் நவீன முறையில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்த பணி வருகின்ற ஏப்ரலில் முடிக்கப்படும்.

மண்டலம்-2, வார்டு-15ல் சஞ்சீவராயன் பேட்டையில் 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனை மண்டலம்-5, வார்டு-55ல் செனாய்நகரில் 27 படுக்கை வசதிகளுடன், புற நோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை அரங்குகள், கழிப்பறை வதிகளுடன் ரூ. ஒரு கோடியே 24 லட்சம் செலவிலும், மண்டலம்-6, வார்டு-93ல் மீர்சாகிப் பேட்டையில் 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனையினை புதுப்பித்து, கூடுதல் வசதிகளான புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு என 25 படுக்கைகளுடன் ரூ. ஒரு கோடியே 39 லட்சத்திலும், மண்டலம்-8, வார்டு-120ல் ஏற்கனவே உள்ள 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனையை புதுப்பித்து, புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, 35 படுக்கைகளுடன் ரூபாய் ஒரு கோடியே 50 லட்சம் செலவிலும், மண்டலம்-10, வார்டு-151ல் அடையாறு வெங்கட ரத்தினம் நகரில் புதிய 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனை 30 படுக்கைகளுடன் கூடிய அறுவைச் சிகிச்சை மையம், சுகப்பிரசவ மையத்துடன் கூடிய தரைத்தளம் மற்றும் 3 தளங்களுடன் கூடிய மருத்துவமனை, புறநோயாளிகள் பிரிவு, கழிப்பறை வசதிகள் என ரூ. 2 கோடியே 30 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மொத்தம் ஐந்து 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனைகள் ரூ.7 கோடியே 41 லட்சம் செலவில் துணை முதல்வர் மு..ஸ்டாலினிலா ஜனவரி மாதம் திறந்து வைக்கப்படும்.

சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலையில் 60 படுக்கைகளுடன் கூடிய அறுவைச் சிகிச்சை மையம், புறநோயாளிகள் பிரிவு என 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனை கட்டும் பணி ரூ. 3 கோடியே 96 லட்சம் செலவிலும், புளியந்தோப்பில் ரூ. 4 கோடியே 10 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனைகளின் கட்டடப் பணிகள் வரும் ஏப்ரல் மாதத்தில் முடிக்கப்படும் என மேயர் கூறியதாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.