24 மணி நேரமும் செயல்படும் 5 மகப்பேறு மருத்துவமனைகள் துணை முதல்வர் திறக்கிறார்

Wednesday, 15 December 2010 06:12 administrator நாளிதழ்௧ள் - ம௧ளிர் நலம் / மேம்பாடு
Print

தினகரன்            15.12.2010

24 மணி நேரமும் செயல்படும் 5 மகப்பேறு மருத்துவமனைகள் துணை முதல்வர் திறக்கிறார்

சென்னை, டிச. 15: சென்னையில் 24 மணி நேரம் செயல்படும் 5 மகப்பேறு மருத்துவமனைகளை துணை முதல்வர் மு..ஸ்டாலின் அடுத்த மாதம் திறந்து வைக்கிறார்.

புளியந்தோப்பு, திருவேங்கடம் சாலையில், மாநகராட்சி சார்பில் கட்டப்படும் 24 மணி நேர நவீன மருத்துவமனை கட்டுமான பணிகளை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.

மேயர் கூறியதாவது:

சென்னையில் ஏழை, எளிய மக்களுக்காக 10 மண்டலங்களில் 24 மணி நேரமும் செயல்படும் மகப்பேறு மருத்துவமனைகளுக்கான கட்டிட பணிகள் நடந்து வருகிறது. அயனாவரம் யுனைடெட் இந்தியா நகர், முதல் பிரதான சாலையில் ரூ1.34 கோடி செலவில் கட்டப்பட்ட 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனை ஏற்கனவே திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புளியந்தோப்பில் ரூ4.1 கோடி செலவில் 24 மணி நேரமும் செயல்படும் மகப்பேறு மருத்துவமனை கட்டும் பணி நடந்து வருகிறது. இங்கு தரை தளம் மற்றும் முதல் தளத்துடன் 40 படுக்கைகள், அறுவை சிகிச்சை கூடம், சுகப்பிரசவ மையம், லிப்ட், சாய்தளம், புறநோயாளிகள் பிரிவு மற்றும் கழிப்பறை என நவீன வசதிகளுடன் உருவாக்கப்படுகிறது. இந்த பணி வரும் ஏப்ரலில் முடியும்.

மண்டலம் 2ல் சஞ்சீவராயன் பேட்டை, சோலையப்பன் தெருவில் ரூ1.8 கோடியில் 20 படுக்கைகளுடனும், ஷெனாய் நகர், புல்லா அவென்யூவில் ரூ1.24 கோடியில் 27 படுக்கைகளுடனும், மீர்சாகிப்பேட்டையில் 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனையை புதுப்பித்து ரூ1.39 கோடியில் 25 படுக்கைகளுடனும், கோடம்பாக்கதில் ரூ1.5 கோடியில் 35 படுக்கைகளுடனும், அடையாறு வெங்கட ரத்தினம் நகரில் ரூ2.3 கோடியில் 30 படுக்கைகளுடனும் 24 மணி நேர மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகின்றன. இவை அனைத்திலும் நவீன வசதிகள் இருக்கும். ஆக 7.41 கோடி செலவில் கட்டப்படும் ஐந்து 24 மணி நேர மருத்துவமனைகளை வரும் ஜனவரி மாதம் துணை முதல்வர் மு..ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலையில் 60 படுக்கைகளுடன் 3.96 கோடியிலும், புளியந்தோப்பில் ரூ4.10 கோடியிலும் கட்டப்படும் 24 மணி நேர மருத்துவமனை கட்டுமான பணிகள் ஏப்ரலில் முடியும். ரூ.15 கோடி செலவில் 24 மணி நேரமும் செயல்படும் 7 மகப்பேறு மருத்துவமனைகளை மாநகராட்சி உருவாக்கி வருகிறது. இவ்வாறு மேயர் கூறினார். வி.எஸ்.பாபு எம்.எல்., நிலைக்குழு தலைவர் அ.மணிவேலன் உடன் இருந்தனர்.