மகளிர் சுய உதவி குழு சார்பில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் சிறப்பு விற்பனை கண்காட்சி

Tuesday, 21 December 2010 08:26 administrator நாளிதழ்௧ள் - ம௧ளிர் நலம் / மேம்பாடு
Print

தினகரன்       21.12.2010

மகளிர் சுய உதவி குழு சார்பில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் சிறப்பு விற்பனை கண்காட்சி

சென்னை, டிச. 21:

மகளிர் சுயஉதவிக்குழுவினர் உற்பத்தி செய்த பொருட்களின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் விற்பனை கண்காட்சி சென்னையில் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நேற்று துவங்கியது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அவருக்கு பனை ஓலை தொப்பியை அணிந்து மகிழ்கிறார் சுயஉதவிக்குழு பெண்.

 

தமிழ்நாட்டில் 76.67 லட்சம் மகளிரை உறுப்பினர்களாக கொண்டு 4,86,412 மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்படுகின்றன. இந்த குழுக்கள் பொருளாதார மேம்பாடு அடைவதற்கும், அவர்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த ஆண்டு மாநில அளவிலான கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் விற்பனைக் கண்காட்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் ஜனவரி 31ம் தேதி வரையும், அண்ணா நகரில் உள்ள தந்தைப் பெரியார் சமூகக் கூடத்தில் ஜனவரி 18ம்தேதி வரையும் நடக்க உள்ளது.

இதற்காக மாநிலம் முழுவதும் இருந்து வந்திருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களால் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் 38 அரங்குகளும், தந்தை பெரியார் சமூகக் கூடத்தில் 34 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், கைவினை மற்றும் கலைப் பொருட்கள், காகிதப் பொருட்கள், மூலிகைப் பொருட்கள், மலைவாழ் மகளிர் தயாரித்த கம்பளி ஆடைகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இரண்டு இடங்களில் நடக்கும் கண்காட்சியை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “சென்னை மட்டுமல்லாமல் மாவட்ட அளவில் இந்த கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. பொருட்களை சந்தைப்படுத்தி நல்ல விலைக்கு விற்பனை செய்ய இந்த கண்காட்சி உதவும்” என்றார்.

ஆர்வமாக வாங்கிய துணை முதல்வர்

மகளிர் சுய உதவிக் குழுவினரின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சியில் கண்ணை கவரும் வகையில் இருந்தது. அதை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆர்வமாக பார்வையிட்டார். அங்கு அமைக்கப்பட்டிருந்த அனைத்து அரங்குகளுக்கும் சென்று பொருட்களின் விபரம் மற்றும் அவை தயாரிப்பதற்கு ஆகும் செலவு குறித்தும் கேட்டறிந்தார். பல அரங்குகளில் பணம் கொடுத்து பொருட்களை வாங்கினார். இதனால் மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தனர். 

Last Updated on Tuesday, 21 December 2010 08:36