தில்லி மாநகராட்சிகளில் மகளிர் தின விழா

Saturday, 09 March 2013 11:43 administrator நாளிதழ்௧ள் - ம௧ளிர் நலம் / மேம்பாடு
Print
தினமணி          09.03.2013

தில்லி மாநகராட்சிகளில் மகளிர் தின விழா


தில்லி மாநகராட்சிகளில், உலக மகளிர் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

வடக்கு, தெற்கு தில்லி மாநகராட்சிகளின் தலைமை அலுவலகமான டாக்டர் ஷ்யாம பிரசாத் முகர்ஜி சிவிக் சென்டரில் நடைபெற்ற விழாவில், மாநிலங்களவை முன்னாள் துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா சிறப்பு விருத்தினராக கலந்து கொண்டார்.

"பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு மகளிர் அமைப்புகள் போராட வேண்டும். பெண்கள் குறித்த பார்வையும், மனப்பான்மையும்  சமூகத்தில் மாற வேண்டும்'' என்று விழாவில் பேசுகையில் நஜ்மா ஹெப்துல்லா குறிப்பிட்டார்.

தெற்கு தில்லி மேயர் சவிதா குப்தா பேசுகையில், ""தங்களின் சக்தி இந்த நாட்டின் சக்தி என்பதை பெண்கள் உணர வேண்டும். ஆண்களுக்கு இணையாக பெண்களும் எல்லாத்துறைகளிலும் முன்னேறி வருகின்றனர். மேற்கத்திய கலாசாரத்தை விரும்பினாலும், அதிலும் பாரம்பரிய அடையாளங்களை விட்டு விடக்கூடாது'' என்று கேட்டுக்கொண்டார்.

வடக்கு தில்லி மேயர் மீரா அகர்வால் பேசுகையில், "விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. சவால்களை எதிர்கொண்டு, பெண்கள் வாழ்வில் வெற்றி பெறுவது அவசியம்'' என்றார்.

கிழக்கு தில்லி மேயர் அன்னப்பூர்ணா மிஸ்ரா பேசுகையில், ""பாலியல் வன்முறைகளைத் தடுக்க வலுவானச் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.

மருத்துவ முகாம்: மகளிர் தினத்தை ஒட்டி வடக்கு தில்லி மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

அதில் வடக்கு தில்லி மாநகராட்சி கல்விக் குழுத் தலைவர் ரேகா குப்தா பேசுகையில், "இந்த முகாமுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையும், புற்றுநோயாளிகள் உதவி அமைப்பும், சஃப்தர் ஜங் ரோட்டரி சங்கமும் ஏற்பாடு செய்துள்ளன. வடக்கு தில்லி மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்களின் உடல் நலன் கருதி, இது போன்ற  மருத்துவ முகாம்கள் பகுதிபகுதியாக நடத்தப்படும். இதன் மூலம் 10,000 ஆசிரியர்கள் பயன் பெறுவர். முகாமில் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்'' என்றார்.