மகப்பேறு மையத்தில் தாய்மார்களுக்கு சத்தான உணவு : முட்டை வழங்க மாநகராட்சி திட்டம்

Tuesday, 08 October 2013 07:02 administrator நாளிதழ்௧ள் - ம௧ளிர் நலம் / மேம்பாடு
Print

தினமலர்             08.10.2013

மகப்பேறு மையத்தில் தாய்மார்களுக்கு சத்தான உணவு: முட்டை வழங்க மாநகராட்சி திட்டம்

கோவை: கோவை மாநகராட்சி மகப்பேறு மையத்தில், குழந்தைப்பேறுக்கு பின், பெண்களுக்கு முட்டை வழங்க, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கோவை அரசு மருத்துவமனையில், குழந்தைப் பேறுக்கு பின், பெண்களுக்கு மூன்று வேளை உணவு, பால், ரொட்டி, முட்டை வழங்கப்படுகிறது. மாநிலத்தில் ஒரு சில மாநகராட்சிகளிலுள்ள மகப்பேறு மையத்தில், குழந்தைப்பேறுக்கு பின், பெண்களுக்கு சத்தான உணவு, முட்டை போன்றவை வழங்கப்படுகிறது.

கோவை மாநகராட்சியில் 20 மகப்பேறு மையங்கள் உள்ளன. கர்ப்பிணி பெண்களுக்கு "ஸ்கேன்' பரிசோதனை, சத்து மாத்திரைகள் வழங்குவதுடன், முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்தொகை, பிறந்த குழந்தைகளுக்கு "ஜனனி சுரக்ஷா யோஜனா' திட்டத்தில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கோவை மாநகராட்சி மகப்பேறு மையத்தில் சுகப்பிரசவம் மட்டுமே பார்க்கப்படுகிறது. குழந்தைப்பேறுக்கு பின், பெண்களுக்கு மூன்று நாட்களுக்கு, தினமும் இருவேளை பால், ரொட்டி போன்றவை வழங்கப்படுகிறது. மகப்பேறு மையத்தில் குழந்தை பிறப்பை அதிகரிக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதனால், சீதாலட்சுமி மகப்பேறு மையத்தில், பிரசவ அறுவைசிகிச்சைக்கான வார்டு துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோன்று, குழந்தைப்பேறுக்கு பின், பெண்களுக்கு பால், ரொட்டியுடன், முட்டை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மாநகராட்சி கமிஷனர் லதா கூறுகையில், ""மகப்பேறு மையத்தில் "ஸ்கேன்' வசதி ஏற்படுத்தியதால், பிரசவ எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு 1100 குழந்தைகள் பிறந்தன. இந்தாண்டு, செப்., வரை 488 குழந்தைகள் பிறந்துள்ளன. குழந்தைப்பேறு எண்ணிக்கையை அதிகரிக்கவும், பிரசவித்த பெண்களுக்கு சத்தான உணவு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக முட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேயர் அனுமதி பெற்றதும் திட்டம் துவங்கப்படும்'' என்றார்.

அரசு மருத்துவமனையில், குழந்தைப்பேறுக்கு பின் பெண்களுக்கு, காலையில் இட்லி, சாம்பார்; காலை 10:00 மணிக்கு பால், ரொட்டி; மதியம் சாப்பாடு, சாம்பார், கீரை அல்லது காய்கறி பொரியல், மோர், முட்டை; மாலை 3:00 மணிக்கு சத்துமாவு கஞ்சி; மாலையில் சாப்பாடு, சாம்பார், சுண்டல் வழங்கப்படுகிறது. இதேபோன்று கோவை மாநகராட்சி மகப்பேறு மையத்தில் குழந்தைப்பேறுக்கு பின், பெண்களுக்கு வழங்கினால் உடல் ஆரோக்கியம் கிடைக்கும்.

தற்போது ரொட்டி, பால், முட்டை வழங்க ஒரு நாளுக்கு ஒருவருக்கு 46 ரூபாய் செலவாகும் என கணக்கிட்டுள்ளனர். இத்திட்டத்தை விரிவுபடுத்தி, அரசு மருத்துவமனை "மெனு'வை, மகப்பேறு மையத்திலும் செயல்படுத்தினால் திட்டத்தின் நோக்கம் நிறைவேறும்.

இந்தாண்டு, செப்., வரை 488 குழந்தைகள் பிறந்துள்ளன. குழந்தைப்பேறு எண்ணிக்கையை அதிகரிக்கவும், பிரசவித்த பெண்களுக்கு சத்தான உணவு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக முட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேயர் அனுமதி பெற்றதும் திட்டம் துவங்கப்படும்.