மதுரை மாநகராட்சி சார்பாக 2,051 பெண்களுக்கு ரூ.7 கோடிக்கு திருமண நிதிஉதவி 2 அமைச்சர்கள்– மேயர் வழங்கினர்

Monday, 10 February 2014 05:32 administrator நாளிதழ்௧ள் - ம௧ளிர் நலம் / மேம்பாடு
Print

தினத்தந்தி             10.02.2014

மதுரை மாநகராட்சி சார்பாக 2,051 பெண்களுக்கு ரூ.7 கோடிக்கு திருமண நிதிஉதவி 2 அமைச்சர்கள்– மேயர் வழங்கினர்

மதுரை மாநகராட்சி சார்பாக ரூ.7 கோடி மதிப்பில், 2,051 பெண்களுக்கு பெண்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டன.

திருமண நிதி உதவி

முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் சிறப்புத் திட்டமான ஏழை பெண்களுக்கு திருமண உதவியும், தாலிக்கு தங்கமும் வழங்கும் விழா, மதுரை மாநகராட்சி சார்பாக ராஜா முத்தையா மன்றத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சுப்பிரமணியன், மாநகராட்சி கமிஷனர் கிரண்குராலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, மேயர் ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமை தாங்கி பெண்களுக்கு தாலிக்கு தங்கம், நிதி உதவிக்கான காசோலைகளை வழங்கினர்.

இந்தியாவுக்கே கிடைக்கும்

விழாவில் பட்டப்படிப்பு படித்த 882 பயனாளிகளுக்கு ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் 4 கிராம் தங்கம், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்–2 படித்த 1,069 பயனாளிகளுக்கு ரூ.25 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் 4 கிராம் தங்கம் என மொத்தம் 2 ஆயிரத்து 51 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 13 லட்சத்து 25 ஆயிரத்து மதிப்பிலான திருமண நிதி உதவி, தலா 4 கிராம் தங்கம் வழங்கப்பட்டது.

விழாவில் அமைச்சர் வளர்மதி பேசியதாவது:– பெண்கள் தங்களின் திருமணத்திற்காக நிதியும், தாலிக்கு தங்கமும் பெற வேண்டும் என்பதற்காக முதல்–அமைச்சர் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தின் நோக்கம் பெண்கள் கல்வியறிவு பெற வேண்டும் என்பது தான். இந்த திட்டத்திற்காக சமூக நலத்துறையின் மூலம் ஆண்டுக்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, விலையில்லா அரிசி, திருமண உதவி திட்டம் என்று எந்த மாநிலத்திலும் நிறைவேற்றப்படாத இதுபோன்ற ல்வேறு திட்டங்களை ஜெயலலிதா நிறைவேற்றி வருகிறார். நாடு முழுவதும் உள்ள மக்களும் இந்த திட்டங்களின் பயன்களை பெறும் வகையில் வருகிற பாராளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பசுமை வீடுகள்

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேசும்போது கூறியதாவது:–

தமிழ்நாட்டு ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக முதல்–அமைச்சர் எண்ணற்ற பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். முதல்–அமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் 1.86 கோடி பேர் பயன் அடைந்து வருகின்றனர். முதியோர் உதவித் தொகை ரூ.500–ல் இருந்து ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

பசுமை வீடு திட்டத்தின் தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் வீடுகள் கட்டி உள்ளனர். மதுரை மாவட்டத்தில் 4,400 வீடுகள் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி தமிழகத்தில் இதுவரை 71 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 26 ஆயிரத்து 261 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வருகிற 2023 ஆண்டில் தமிழ்நாடு ஆசியாவிலேயே சிறந்த நாடாக கொண்டு வருவதற்கு திட்டம் தீட்டி செயல்பட்டு வருகிறார் என்றார்.

குடிநீர் பற்றாக்குறை

மேயர் ராஜன் செல்லப்பா பேசும்போது கூறியதாவது:–

முதலமைச்சரின் உத்தரவுப்படி, மதுரை மாநகராட்சியில் அடிப்படை வசதிகள் சிறப்பாக நிறைவேற்ற பட்டு வருகிறது. குறிப்பாக 80 சதவீத சாலை பணிகள் நிறைவடைந்து உள்ளது. குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக போர்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டிலேயே மதுரை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்கள் ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் பெற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சியில் 3 ஆயிரத்து 432 பயனாளிகளுக்கு இதுவரை ரூ.12.45 கோடி மதிப்பிலான திருமண நிதி உதவியும் ரூ.12 கோடி மதிப்பிற்கும் மேலான 4 கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சுகாதார பிரிவு

விழாவில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜக்கையன், எம்.எல்.ஏ.க்கள் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முத்துராமலிங்கம், ஏ.கே.போஸ், சாமி, தமிழரசன், கருப்பையா, சுந்தர்ராஜன், துணைமேயர் கோபாலகிருஷ்ணன், மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நகர்நல அலுவலர் யசோதாமணி தலைமையில் மாநகராட்சி சுகாதார பிரிவு அலுவலர்கள் செய்திருந்தனர்.