நகர்ப்புற ஏழைகள் மானியத்தில் வீடு கட்டுவது குறைந்தது ஏன்

Thursday, 30 September 2010 07:54 administrator நாளிதழ்௧ள் - வறுமை ஒழிப்பு
Print

தினமலர் 30.09.2010

நகர்ப்புற ஏழைகள் மானியத்தில் வீடு கட்டுவது குறைந்தது ஏன்

மதுரை : மதுரை மாவட்டத்தில் நகர்ப்புற ஏழைகள் வீடு கட்ட, ஒருலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை வங்கிக்கடன் மற்றும் வட்டி மானியம் அறிவித்தும், இதுவரை 19 பேர் மட்டுமே மானியம் பெற்றுள்ளனர். நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர் (மாதம் 5000 ரூபாய் வருமானம்), குறைந்த வருவாய் பிரிவினர்கள் (5001 - 10ஆயிரம் ரூபாய்) வீட்டுக்கடன், வட்டி மானியம் பெற தகுதியானவர்கள். நலிவுற்றோர் ஒரு லட்சம் ரூபாய் வரையும், குறைந்த வருவாய் பிரிவினர் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெறலாம். ஒரு லட்சம் வரையான கடனுக்கு, ஐந்து சதவீத வட்டி மானியம் அரசால் வழங்கப்படுகிறது. கூடுதலாக கடன்தொகை பெற்றாலும், அதிகபட்சமாக ஒருலட்சம் ரூபாய் வரை வட்டி மானியம் பெறமுடியும். நலிவுற்றோர் 25 சதுரமீட்டர் பரப்பளவிலும், குறைந்த வருமானம் உடையோர் 40 சதுரமீட்டர் பரப்பளவிலும் வீடுகட்டலாம். சொந்தவீடு இல்லாதோர் மட்டும் இத்திட்டத்தில் சேரலாம். சொந்தநிலமுடையோர் பட்டா உரிமை பெற்றிருக்க வேண்டும். இலவச வீட்டுமனை பட்டா பெற்றவர்களும் பயன்பெறலாம்.

மானியம் பெறுவதில் சிக்கல் :நகர்ப்புறங்களில் ஆயிரக்கணக்கான ஏழைகள் இருந்தும், இதுவரை 19 பேருக்கு மட்டுமே வட்டி மானியம் வழங்கப்பட்டுள்ளது. 5620 பேருக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் வீட்டுவசதி வாரியத்தின் மூலமே விண்ணப்பிக்க முடியும் என்பதால், இதுவரை 1818 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாததால் 952 விண்ணப்பங்கள் வங்கியால் திருப்பி அனுப்பப்பட்டன. 857 விண்ணப்பங்கள் காத்திருப்போர் பட்டியலில் இருக்கின்றன. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் ஒரு சதவீதம் கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. இந்நிலையில் 11 ஆயிரத்து 520 பேருக்கு வட்டிமானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வட்டி மானியம் பெறுவதற்கு ஏகப்பட்ட தடைகள் இருப்பதாலேயே, பயனாளிகளுக்கு இத்திட்டம் பயன்படவில்லை.

என்ன காரணம் : வருமானச் சான்றிதழ் பெறுவதில் கிராம நிர்வாக அலுவலகத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடக்கின்றன. ஆண்டு வருமானத்தைப் பற்றிய தெளிவான குறிப்பிட்டிருந்தும், சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஏனெனில் ரேஷன் கார்டில் மாத வருமானம் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போல, இத்திட்டத்தின் வருமான அளவிற்கும் சம்பந்தம் இல்லை. இலவச பட்டா வைத்திருப்பவர்கள், அடமானம் வைக்கக்கூடாது என்ற உத்தரவால், கடன் பெற முடியவில்லை.

விதிமுறைகள் தளர்வு : மத்திய அரசு தற்போது விதிமுறைகளை சற்றே தளர்த்தியுள்ளது. வீட்டுக்கடனுக்காக மட்டும், இலவச பட்டாவை வங்கியில் அடமானமாக கொடுக்கலாம். பத்திரப் பதிவு கட்டணம், தண்ணீருக்கு வரியில்லை என மேலும் பல சலுகைகளை வழங்கியுள்ளது. ஆனாலும் வங்கிகளின் கெடுபிடியாலும், வீட்டுவசதி வாரியத்தின் முறையான வழிகாட்டுதல் இல்லாததாலும் பயனாளிகள் கிடைக்கவில்லை.

தீர்வு என்ன : வீட்டுக்கடன் பெற விண்ணப்பிக்கும் போது, என்னென்ன ஆவணங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என தெளிவுபடுத்த வேண்டும். என்ன காரணத்தால் வங்கிகள் விண்ணப்பங்களை நிராகரித்தது என்பதை ஆராய வேண்டும். விண்ணப்பம் பெற்றவர்கள், அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்துள்ளனரா, போதுமான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனரா என்பதை கவனித்தால், குறைகளைச் சரிசெய்து விடலாம். அதன்பின், வங்கிகளும் நிராகரிக்க முடியாது. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.