நகர்புற ஏழை, எளியவர்களுக்கு வீடு கட்ட மானியத்துடன் கடன்

Thursday, 07 October 2010 05:40 administrator நாளிதழ்௧ள் - வறுமை ஒழிப்பு
Print

தினமலர் 07.10.2010

நகர்புற ஏழை, எளியவர்களுக்கு வீடு கட்ட மானியத்துடன் கடன்

தென்காசி:"நகர்புற ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்ட மானியத்துடன் கூடிய கடன் பெற்று தரப்படும்' என தென்காசியில் நடந்த விழாவில் கலெக்டர் ஜெயராமன் பேசினார்.தென்காசி நகராட்சி பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் மானிய வட்டியுடன் வீட்டு கடன் பெறும் திட்டத்தில் விண்ணப்பம் பெறும் முகாம் நடந்தது. நகராட்சி தலைவர் கோமதிநாயகம் தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் செழியன் வரவேற்றார்.

மாவட்ட கலெக்டர் ஜெயராமன் பயனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு பேசும் போசியதாவது:-""நகர்புற ஏழை, எளிய மக்கள், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள், நிரந்தர வீடு இல்லாத மக்கள், மழை காலத்தில் வீடு இல்லாமல் சிரமப்படுவோருக்கு மானிய வட்டியுடன் கடன் வழங்கி வீடு கட்டும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கிராமப்புற மக்களுக்கு கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது. டவுன் பஞ்., நகராட்சி பகுதியில் வீடு கட்ட தனி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தின் முக்கிய சிறப்பு பயனாளிகள் வீடுகளை விருப்பப்படி கட்டலாம். மாதம் 5 ஆயிரம் ரூபாய்க்குள் வருமானம் உள்ளவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். மாதம் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வருமானம் உள்ளவர்களுக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படும். 1 லட்சம் ரூபாய் கடன் பெறுபவர்கள் 250 சதுர அடியில் வீடு கட்ட வேண்டும். இவர்களுக்கு 29 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.

1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கடன் பெறுபவர்கள் 431 சதுர அடியில் வீடு கட்ட வேண்டும். இவர்களுக்கு 35 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.கடன் தொகையை 15 முதல் 20 ஆண்டுகள் வரை திரும்ப செலுத்தலாம். சங்கரன்கோவில், புளியங்குடி நகராட்சி பகுதியில் ஏற்கனவே இத்திட்டத்திற்கு மனுக்கள் பெறப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் விரைவில் பாங்க் கூட்டம் நடத்தி இத்திட்டத்தில் கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடன் பெறும் தொகைக்கு வீடு கட்டும் இடத்தை அடமானம் எழுதி கொடுக்க வேண்டும். வேறு ஜாமீன் தேவையில்லை. இத்திட்டத்தை மக்கள் முழுமையாக பயன்படுத்தி நகராட்சி பகுதியில் குடிசைகள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்'' என்று கலெக்டர் ஜெயராமன் பேசினார்.நகராட்சிகளின் மண்டல இயக்குநர் மோகன், தென்காசி ஆர்.டி..சேதுராமன், தாசில்தார் விஜயா, நகராட்சி துணைத் தலைவர் இப்ராகிம், நெல்லை வீட்டு வசதி வாரிய உதவி செயற்பொறியாளர் சதாசிவம், உதவி பொறியாளர் எட்வின் சுந்தர்சிங், கவுன்சிலர்கள் ராமராஜ், கணபதி, கல்யாணி, இன்ஜினியர் ராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 07 October 2010 07:47