இந்தியாவில் 7 கோடி மக்களுக்கு வசிக்க வீடு இல்லை

Monday, 11 October 2010 07:53 administrator நாளிதழ்௧ள் - வறுமை ஒழிப்பு
Print

தினகரன் 11.10.2010

இந்தியாவில் 7 கோடி மக்களுக்கு வசிக்க வீடு இல்லை
புதுடெல்லி, அக்.11: பொருளாதார வளர்ச்சி, நகர மயமாதல் ஆகிய காரணங்களால், இந்தியாவில் வீடுகளுக்கான பற்றாக்குறை 7 கோடியாக உள்ளது. இந்த பிரச்னையை சமாளிக்க வீடுகள் கட்ட கடன் தாராளமாக கிடைக்க வகை செய்ய வேண்டும் என்றும் உலக வங்கி அறிக்கை கூறுகிறது.

தெற்கு ஆசியாவில் வீட்டுக் கடன் விரிவாக்கம்என்ற தலைப்பில் உலக வங்கி ஓர் ஆய்வை மேற்கொண்டது. அதில் கூறியிருப்பதாவது:

உலகின் மொத்த மக்கள் தொகையில் 25 சதவீதம் பேர் இந்தியாவை உள்ளடக்கிய தெற்கு ஆசியாவில் வசிக்கின்றனர். இவர்களில் 14 சதவீதம் பேருக்கு வீட்டு வசதி இல்லை. இதன்படி பார்த்தால் இந்தியாவில் மட்டும் 2 கோடி முதல் 7 கோடி வீடுகள் தேவைப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சுமார் 3 கோடி பேர் வீடுகள் வாங்க தயாராக உள்ளனர். ஆனால், இவர்களது குடும்ப மாத வருமானம் சராசரியாக ரூ5 ஆயிரம் முதல் ரூ11 ஆயிரம் வரை உள்ளதால் வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் பெறுவது சிக்கலாக உள்ளது.

இவர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு, குறைந்த பட்ஜெட் வீடுகளை கட்டித் தர கட்டுமான நிறுவனங்கள் முன்வர வேண்டும். அதேபோல், வீட்டுக் கடன் நிறுவனங்களும் நீண்ட கால அடிப்படையில் மிகக் குறைந்த வட்டியில் கடன் வழங்க முன்வர வேண்டும். இதனால் வீடுகள் பற்றாக்குறையில் பாதியை சரிசெய்ய முடியும்.

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருவதால் நகரமயமாவதும் நடுத்தர குடும்பங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதுவே வீடுகளுக்கான தேவை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம். கட்டுமான நடவடிக்கைகளால் அடுத்த 10 ஆண்டுகளில் 32 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும். இவ்வாறு அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.