நகர்ப்புற ஏழைகள் வீடுகட்ட வாங்க விண்ணப்பிக்கலாம்

Thursday, 11 November 2010 07:21 administrator நாளிதழ்௧ள் - வறுமை ஒழிப்பு
Print

தினமலர்                11.11.2010

நகர்ப்புற ஏழைகள் வீடுகட்ட வாங்க விண்ணப்பிக்கலாம்

மதுரை : நகர்ப்புற ஏழைகளுக்கு வீடுகட்ட, வீடுவாங்க மானிய வட்டியில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் காமராஜ் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் நலிவுற்ற பிரிவினரில் மாத வருமானம் 5 ஆயிரம் ரூபாய், குறைந்த வருவாய் பிரிவினரின் மாத வருமானம் 3001 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். நலிவுற்ற பிரிவினருக்கு ஒரு லட்சம் ரூபாய் குறைந்த வருமான பிரிவினருக்கு 1.6 லட்சம் ரூபாய் கடனாக வழங்கப்படும். இத்தொகையை 15 முதல் 20 ஆண்டுகால இடைவெளியில் திரும்ப செலுத்த வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுத் தரப்படும் கடன் தொகைக்கு உரிய வட்டித் தொகையில் 3 சதவீத மானியம் வழங்கப்படும். கூடுதலாக கடன் தேவைப்படுவோருக்கு கூடுதல் தொகைக்கு ஏற்ப வழக்கமான வட்டி வசூலிக்கப்படும். பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர் வீடுகள் குறைந்தபட்சம் 25 சதுர மீட்டரும், குறைந்த வருவாய் பிரிவினருக்கு 40 சதுரமீட்டரிலும் வீடு இருக்க வேண்டும். சொந்த வீடு இல்லாதோர் மட்டும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

சொந்தமாக நிலம் வைத்திருப்போர் அதற்கான பட்டா உரிமை பெற்று இருக்க வேண்டும். இலவச வீட்டுமனை பட்டா பெற்றோரும் இதில் பயன்பெறலாம். இதுதொடர்பான விபரங்களுக்கு மதுரை எல்லீஸ்நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி பிரிவு செயற்பொறியாளரை அணுகி விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.