வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் அமைச்சர் நமச்சிவாயம் தகவல் கணக்கெடுப்புபணி விரைவில்துவக்கம்

Tuesday, 16 November 2010 07:43 administrator நாளிதழ்௧ள் - வறுமை ஒழிப்பு
Print

தினகரன்                  16.11.2010

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் அமைச்சர் நமச்சிவாயம் தகவல் கணக்கெடுப்புபணி விரைவில்துவக்கம்

புதுச்சேரி, நவ. 16: பொன்விழா நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் உழவர்கரை நகராட்சி பகுதியைச்சேர்ந்த 79 சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கும் விழா, தையல், மளிகை, உணவகம் உள்ளிட்ட சுயவேலை வாய்ப்பை தொடங்க 40 பேருக்கு மானியத்துடன் வங்கிமூலம் கடனுதவி வழங்கும் விழா, புதுவை நகராட்சி பகுதியை சேர்ந்த 50 பெண்களுக்கு புத்தக பைண்டிங் உள்ளிட்ட தொழிற்கருவிகள், உதவித்தொகை வழங்கும் விழா புதுவை கம்பன்கலையரங்கில் நேற்று நடந்தது.

புதுவை நகராட்சி ஆணையர் அசோகன் வரவேற்றார். அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் விசுவநாதன், அன்பழகன், நாரா.கலைநாதன், புதுவை நகராட்சி தலைவி ஸ்ரீதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், 79 சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதியாக ரூ.10,32,750ம், சுயவேலைவாய்ப்பை தொடங்க 40 பேருக்கு ரூ.1,63,500 மானியத்துடன் வங்கி மூலம் தனிநபர் கடனாக ரூ.6,19,000ம், 50 பெண்களுக்கு தையல், புத்தக பைண்டிங் தொழிற்பயிற்சி கருவிகள், கடனுதவிகளை அமைச்சர் நமச் சிவாயம் வழங்கி பேசிய தாவது:

புதுவை அரசு நகர, கிராம மக்களுக்காக தனித்தனியாக திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. நகர்ப்புறத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் பற்றிய கணக்கெடுப்பு பணி நடத்த குடிசை மாற்றுவாரியத்துக்கு ஒப்பாணை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்த கணக்கெடுப்பு பணியை விரைவில் தொடங்குவர்.

சுயஉதவிகுழுக்களுக்கு சீருடை வழங்குவது குறித்து முதல்வருடன் பேசி, நிதி திரட்டி கண்டிப்பாக வழங்கப்படும். மக்கள் மன தறிந்து அரசு செயல்பட்டு வருகிறது.

33 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதன் மூலம் தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு 33 சதவீத சீட் கிடைக்கும். பெண்களுக்காக காங்கிரஸ் அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

உள்ளாட்சித்துறை இயக்குனர் பாலசுப்பிரமணியன், உழவர்கரை நகராட்சி ஆணையர் ராஜமாணிக்கம், புதுவை நகராட்சி திட்ட அதிகாரி பொன்.சகுந்தலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

‘நல்லது செய்தாலும் அரசை குறை கூறுவது வாடிக்கை‘

அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், ‘ரூ.1க்கு ஒரு கிலோ அரிசி, ரூ.1 கட்டணத்தில் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து, மகளிருக்காக குலவிளக்கு திட்டம், அரவணைப்பு திட்டம் என பல்வேறு திட்டங்களை புதுவை காங்கிரஸ் அரசு செயல்படுத்தி வருகிறது. இவையனைத்தையும் செய்து கொடுப்பது அதிமுகவோ அல்லது அன்பழகனோ அல்ல. காங்கிரஸ் கூட்டணி அரசுதான் இவற்றை செய்து கொடுக்கிறது. 2, 3வருடங்களாக கிடப்பில் கிடந்த திட்டங்களையும் நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறோம். எந்த திட்டமாக இருந்தாலும் சிவப்பு, மஞ்சள் ரேஷன் அட்டை என்று வித்தியாசம் பார்க்காமல் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுத்தி வருகிறோம். அரசு என்னதான் நல்லது செய்தாலும், அதில் குறை கூறுவதே அன்பழகனின் வாடிக்கைஎன்றார்.