வீடு கட்ட வழங்கப்படும் கடனுதவியை முறையாக பயன்படுத்த ஆட்சியர் வேண்டுகோள்

Thursday, 18 November 2010 11:08 administrator நாளிதழ்௧ள் - வறுமை ஒழிப்பு
Print

தினமணி            18.11.2010

வீடு கட்ட வழங்கப்படும் கடனுதவியை முறையாக பயன்படுத்த ஆட்சியர் வேண்டுகோள்

உதகை, நவ. 17: நீலகிரி மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு வீடு கட்ட வழங்கப்படும் கடனுதவியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் கோரிக்கை விடுத்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் பயனடையும் வகையில், அவர்கள் வீடு கட்டிக் கொள்ள வங்கிகள் மூலம் ரூ.1 லட்சமும், குறைந்த வருவாய் பிரிவினருக்கு

ரூ.1.6 லட்சம் வழங்கவும் நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் பயன்களை விரிவாக எடுத்துக்கூற உதகையிலுள்ள மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து பேரூராட்சி மற்றும் நகராட்சிகளின் தலைவர்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் குறித்து விரிவாக விளக்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் குப்புசாமி, மகளிர் திட்ட அலுவலர் ராமசாமி ஆகியோர் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். இத்திட்டம் குறித்து பொதுமக்களிடையே தேவையான அறிவிப்புகளை வழங்கி இத்திட்டத்தை சீரிய முறையில் செயலாக்க அனைத்து உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.