பெரியார் பஸ் நிலைய பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Thursday, 27 August 2009 07:46 administrator நாளிதழ்௧ள் - வறுமை ஒழிப்பு
Print

தினமணி 27.08.2009

பெரியார் பஸ் நிலைய பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மதுரை, ஆக. 26: மதுரை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அப்புறப்படுத்தப்பட்டன.

தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட ரீகல் திரையரங்கம், மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, டவுன்ஹால் ரோடு, பெரியார் பஸ் நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக ஆக்கிரமிப்புகள் இருப்பதாக மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டினுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதன்பேரில், ஆணையரின் உத்தரவுப்படி உதவி ஆணையர் ஏ. தேவதாஸ் தலைமையிலான அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மேலும், பெரியார் பஸ் நிலையம் மற்றும் சில இடங்களில் புகை பிடித்தவர்களுக்கு ரூ. 7 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பெரியார் பஸ் நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்படும் என்றும் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் ஆணையர் தெரிவித்துள்ளார்.