"வறுமையை ஒழிக்க இந்தியா கடுமையாக பாடுபட வேண்டும்"

Tuesday, 09 September 2014 08:53 administrator நாளிதழ்௧ள் - வறுமை ஒழிப்பு
Print
தினமணி      09.09.2014

"வறுமையை ஒழிக்க இந்தியா கடுமையாக பாடுபட வேண்டும்"

இந்தியா வறுமையை ஒழிக்க கடுமையாகப் பாடுபட வேண்டும் என்று ஐ.நாவின் உணவு, வேளாண் அமைப்பின் தலைமை இயக்குநர் கிரேசியானோ டி சில்வா தெரிவித்துள்ளார்.

பிரேசிலில் பசியைப் போக்கும் திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றியதற்காக கிரேசியானோ டி சில்வாவுக்கு இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் விருது வழங்கும் விழா தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் அவர் பேசியதாவது:

கடந்த 2011-13 ஆம் ஆண்டின் கணக்கெடுப்புப் படி 125 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவில் 17 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அடுத்த ஆண்டிற்குள் உலகம் முழுவதும் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. சபை இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதுதொடர்பாக பல்வேறு பிராந்தியங்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. வறுமையை ஒழிக்க கடுமையாகப் பாடுபட வேண்டிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

2013-14 ஆம் ஆண்டில் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 24.6 கோடி டன்களாகும். இருப்பினும், அதிக அளவிலான உணவுதானிய உற்பத்தியினால் மட்டுமே வறுமையை ஒழித்துவிட முடியாது. வேலை வாய்ப்பையும் பெருக்க வேண்டும் என்று கிரேசியானோ டி சில்வா தெரிவித்தார். கோதுமை, அரிசி, கொண்டக்கடலை, சோயா, காய்கறிகள் ஆகியவற்றில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட 14 புதிய பயிர் ரகங்களை இந்த விழாவில் கிரேசியானோ டிசில்வா அறிமுகப்படுத்தினார்.