வீடு கட்ட வட்டி மானியத்தில் ரூ.1.60 லட்சம் கடன்: ஆட்சியர்

Wednesday, 23 December 2009 09:37 administrator நாளிதழ்௧ள் - வறுமை ஒழிப்பு
Print

தினமணி 23.12.2009

வீடு கட்ட வட்டி மானியத்தில் ரூ.1.60 லட்சம் கடன்: ஆட்சியர்

விழுப்புரம், டிச. 22: நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உள்பட்ட பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு சொந்தமனைப் பட்டா இருந்தால் வட்டி மானியத்தில் வீடு கட்டுவதற்கு ரூ.1.60 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.பழனிச்சாமி அறிவித்தார்.

÷இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையின் விவரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு உள்பட்ட குறைந்த வருவாய் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு உதவும் பொருட்டு தங்களது பெயரில் சொந்தமாக மனைப்பட்டா உள்ள அனைவருக்கும் வட்டி மானியத்தில் வீடு கட்டுவதற்கு வங்கிகள் மூலம் கடனுதவி வழங்குவதற்கு பயனாளிகளை தேர்வு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்வதற்கு தமிழக அரசு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தை நியமனம் செய்துள்ளது.

÷எனவே, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் மாத வருமானம் ரூ.3300 வரை உள்ளவர்களுக்கு மானிய வட்டியல் ரூ.1 லட்சம் வரை கடன் வழங்கப்படும். மாத வருமானம் ரூ.3,301 முதல் ரூ.7300 வரை உள்ளவர்களுக்கு மானிய வட்டியில் ரூ.1,60,000 வரை கடன் வழங்கப்படும். வங்கிக்கு செலுத்த வேண்டிய வட்டியில் மத்திய அரசினால் மானியமாக ரூ.1 லட்சத்துக்கு அதிகபட்சமாக 5 சதவீதம் வழங்கப்படும். அதற்கு மேற்பட்ட கடன் தொகைக்கான வட்டியை கடன்தாரர் செலுத்த வேண்டும்.

÷விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய நகராட்சிப் பகுதிகளைச் சேர்ந்தவர்களும், மாவட்டத்தில் 15 பேரூராட்சி பகுதிகளைச் சேர்ந்தவர்களும் மேற்குறிப்பிட்ட மாத வருமானத்தில் சொந்தமாக மனைப்பட்டா இருந்தால் கீழே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு உடனடியாக விண்ணப்பித்து மானிய வட்டியில் ரூ.1.60 லட்சம் வரை வங்கிக் கடன் பெற்று வீடுகட்டிக் பயன்பெறலாம்.

வீடுகட்ட விரும்புபவர்கள் தகுந்த சான்றுகளுடன் செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், விழுப்புரம் வீட்டுவசதிப் பிரிவு, கிழக்கு புதுச்சேரி சாலை, மகாராஜபுரம், விழுப்புரம்-605 602 (04146-249606) என்ற முகவரியில் அணுகி விண்ணப்பத்தை அளிக்கலாம் என்றார்.

Last Updated on Wednesday, 23 December 2009 09:39