பரமக்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Saturday, 17 August 2013 08:14 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ஆக்கிரமிப்பு௧ள்
Print

தினமணி                17.08.2013

பரமக்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலை மற்றும் நெடுஞ்சாலைப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வெள்ளிக்கிழமை கோட்டாட்சியர் ஆர். குணாளன் தலைமையில் நடைபெற்றது.

 பரமக்குடி கோட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகள், சமுதாய கொடிகள், பேனர்கள் உள்ளிட்ட அனைத்தையும் அகற்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

 அதன்பேரில் பரமக்குடி நகராட்சி பகுதியில் ஒருசிலர் தானாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டனர். இந்நிலையில் கோட்டாட்சியர் ஆர். குணாளன் தலைமையில் காவல் துணை கண்காணிப்பாளர் வி. வினோத் சாந்தாராம், வட்டாட்சியர் பா. வேணுகோபால், நகராட்சி ஆணையாளர் பொ. தங்கப்பாண்டி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர், மின்வாரிய ஊழியர்களுடன் சென்று ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

 பரமக்குடி ஓட்டப்பாலம் பகுதியில் தொடங்கி வசந்தபுரம், பாரதிநகர், ஐந்துமுனை சந்திப்பு, ஆர்ச் பகுதி, பேருந்து நிலையம், தீயணைப்பு நிலையம் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் ஒரு பிரிவாகவும், அதே ஓட்டப்பாலம் பகுதியிலிருந்து திரெüபதி அம்மன் கோயில், வட்டாட்சியர் அலுவலகம், வைகை ஆற்றுப்பாலம், வைகை நகர், தர்மராஜபுரம் ஆகிய நெடுஞ்சாலைப் பகுதியில் மற்றொரு பிரிவாகவும் சென்று ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

 இதில் வருவாய்த்துறை, காவல்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி, மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் காலை 8.00 முதல் மாலை 6.00 மணிவரை ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆக்கிரமிப்பை அகற்றிய பின்பு மீண்டும் ஆக்கிரமிப்போர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோட்டாட்சியர் தெரிவித்தார்.